மகாராஷ்ட்ரா சட்டமன்றத்துக்கு நவம்பர் 20ம் தேதி தேர்தல் நடந்தது. 23ம் தேதி ரிசல்ட் அறிவிக்கப்பட்டது. இதில் பாஜக 132, ஷிண்டே கட்சி 57, அஜித் பவார் கட்சி 41 இடங்களை பிடித்தது. பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்றது. ஆனாலும் அமைச்சரவை பதவி ஏற்பதில் சிக்கல் ஏற்பட்டது. ஏக்நாத் ஷிண்டே முதல்வர் பதவி வேண்டும் என அடம் பிடித்தார். ஆனால் பாஜக அதற்கு இணங்கவில்லை. பாஜகவை சேர்ந்தவர் தான் முதல்வர் ஆவார் என கூறிவிட்டது.
இந்த நிலையில் ஷிண்டே நேற்று தான் துணை முதல்வர் பதவி ஏற்க சம்மதித்ததாக தெரிகிறது. இந்த நிலையில் இன்று மும்பையில் பாஜக கூட்டணி எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடந்தது. இதில் சட்டமன்ற கட்சித் தலைவராக(முதல்வராக) தேவேந்திர பட்னவிசை தேர்வு செய்தனர். அவர் நாளை பதவி ஏற்கிறார். ஷிண்டே, அஜித் பவார் ஆகியோர் துணை முதல்வர்களாக பதவி ஏற்கிறார்கள். இன்று தேவேந்திர பட்னவிஸ், கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணனை சந்தித்து தன்னை பதவி ஏற்க அழைப்பு விடுக்கும்படி கோர இருக்கிறார்.