Skip to content

தாறுமாறாக உயர்ந்த தக்காளி விலை…. இல்லத்தரசிகள் அதிர்ச்சி….

தஞ்சையில் தக்காளி விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. இதர காய்கறிகளின் விலைகளும் கடுமையாக உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விளைச்சல் இல்லாததால் தக்காளி வரத்து குறைந்ததால் விலைவாசி உயர்ந்துள்ளது. தஞ்சை அரண்மனை வளாகத்தின் அருகே  உள்ள காமராஜர்  மார்க்கெட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கர்நாடகா, ஆந்திரா, மராட்டியம், ஒடிசா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

இதேபோல் தஞ்சையில் இருந்தும் வெளியூர்களுக்கு காய்கறிகள் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படும். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் தக்காளி தஞ்சைக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. தினமும் 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம்

பெட்டிகளில் (ஒரு பெட்டியில் 25 கிலோ தக்காளி இருக்கும்) தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்படும்.

ஆனால் வரத்து குறைந்த காரணத்தால் கடந்த சில நாட்களாக தஞ்சையில் தக்காளி விலை அதிகரித்து வருகிறது. அதிலும் தற்போது தமிழகத்தில் தக்காளி விளைச்சல் இல்லை. இதனால் தஞ்சைக்கு ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து தான் தக்காளி விற்பனைக்கு வருகிறது.

1, 200 முதல் 1500 பெட்டிகளே விற்பனைக்கு வருகின்றன. தேவை அதிகமாக உள்ள நிலையில் வரத்து குறைவாக இருப்பதால் விலை கடுமையாக உயர்ந்து கொண்டே செல்கிறது. காமராஜர் மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி நேற்று ரூ. 110-க்கு விற்பனை செய்யப்பட்டது.  சில்லறை விற்பனையில்  தக்காளி விலை கிலோ ரூ.140க்கு விற்பனையாகிறது. இதனால் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுபோல இஞ்சி விலையும் கடுமையாக உயர்ந்து உள்ளது. ஒருகிலோ இஞ்சி  ரூ.235 முதல் 250 வரை விற்பனையாகிறது. அதே நேரத்தில் தேங்காய் விலையில் எந்த உயர்வும் இல்லை. சிறிய காய்கள் 10 ரூபாய் முதல் கிடைக்கிறது. இதுபோல நாட்டு காய்கறிகளான  கொத்தவரங்காய்,   சுரைக்காய், பீர்க்கங்காய், கீரை வகைகள்  மற்றும் முட்டைக்கோஸ் வழக்கமான விலைகளில் கிடைக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!