தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் கடுமையான மழைப்பொழிவு மற்றும் வரத்து குறைவு காரணமாக தக்காளியின் விலை ஏறு முகமாகவே காணப்படுகிறது. கரூர் உழவர் சந்தையில் 1 கிலோ தக்காளி முதல் ரகம் 80 ரூபாய்க்கும், இரண்டாவது ரகம் 70 ரூபாய்க்கும், வெளிச்சந்தையில் சாதாரணமாக 1 கிலோ தக்காளி 90 ரூபாய் வரை விற்பனையாகிறது.
இதேபோல் தக்காளி கமிஷன் மண்டிகளில் 15 கிலோ அளவுள்ள சிறிய பெட்டியின் விலை 1250 ரூபாய்க்கும், 30 கிலோ அளவுள்ள பெரிய பெட்டியின் விலை 2000 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஒரு கிலோ தக்காளி 30 முதல் 40 ரூபாய் வரை விற்பனையான நிலையில், தற்போது கிலோ 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வரத்து குறைவு காரணமாக தக்காளி விலை உயர்ந்துள்ளதாகவும், இதேநிலை நீடித்தால் 100 ரூபாயை கடந்து தக்காளி மேலும் விலை உயர வாய்ப்புள்ளது எனக் கூறப்படுகிறது.
குறிப்பாக தக்காளியின் விலை10 முதல் 15 நாட்கள் வரை குறைய வாய்ப்பில்லை எனவும் கமிஷன் மண்டி வியாபாரிகள் அதிர்ச்சி தகவல் கொடுத்துள்ளனர். விலையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேபோல் பீன்ஸ் ஒரு கிலோ 170 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. திருச்சி, கரூர், தஞ்சை மாவட்டங்களில் தக்காளி, பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.