சென்னை அருகில் உள்ள பரனூர், வானகரம் உட்பட தமிழகத்தில் 40 சுங்கச்சாவடிகளின் சுங்கக்கட்டணம் வரும் ஏப்.1-ம் தேதி முதல் உயர்த்தப்படுவதாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் 78 சுங்கச்சாவடிகள் செயல்படுகிறது. இதில் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 12 சுங்கச்சாவடிகள் புதிதாக திறக்கப்பட்டது. இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கு ஒருமுறை, இரண்டு கட்டங்களாக ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களில் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது.
அந்தவகையில் நடப்பாண்டில் தமிழகத்தில் உள்ள 78 சுங்கச்சாவடிகளில் முதல்கட்டமாக 40 சுங்கச்சாவடிகளுக்கு சுங்கக்கட்டணம் வரும் ஏப்.1-ம் தேதி முதல் உயர்த்தப்பட உள்ளதாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் தரப்பில் தெரிவிக்கப்படுள்ளது. அதன்படி சென்னையை அடுத்துள்ள வானகரம், சூரப்பட்டு சுங்கச்சாவடிகள், சென்னை – கொல்கத்தா நெடுஞ்சாலையில் உள்ள நல்லூர் சுங்கச்சாவடி, தாம்பரம் – திண்டிவனம் நெடுஞ்சாலையில் உள்ள ஆத்தூர் சுங்கச்சாவடி, செங்கல்பட்டில் உள்ள பரனூர் சுங்கச்சாவடி, பட்டறைப்பெரும்புதூர் சுங்கச்சாவடி உள்ளிட்ட 40 சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் உயர்வு ஏப்.1 முதல் அமலுக்கு வருகிறது.
இதில் ஒவ்வொரு வகை வாகனங்களுக்கும் ஏற்ப ரூ.5 முதல் ரூ.25 வரை கட்டணம் உயர்த்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது. மீதமுள்ள சுங்கச்சாவடிகளில் இரண்டாம் கட்டமாக வரும் செப்.1-ம் தேதி கட்டணம் உயர்த்தப்படும் என தெரிகிறது.