Skip to content
Home » தமிழகத்தில் உள்ள சுங்கச் சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமல்..

தமிழகத்தில் உள்ள சுங்கச் சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமல்..

தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் 62 சுங்கச்சாவடிகள் உள்ளன. இவற்றில் ஆண்டுக்கு இரு முறை கட்டணத்தை மாற்றி அமைப்பது வழக்கம். அந்த வகையில் நடப்பாண்டு ஏப். 1-ம் தேதி முதல் 34 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே, மக்களவைத் தேர்தல் நடைபெற்றதால் கட்டண உயர்வு அமலாகவில்லை. இந்நிலையில், மக்களவைத் தேர்தலின் இறுதிகட்ட வாக்குப்பதிவு நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், இன்று (ஜூன் 2) நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, இன்று காலை வெளியாகும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படி, ஆத்தூர், பரனூர், சூரப்பட்டு, வானகரம்,வாணியம்பாடி உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் 4 முதல் 5 சதவீதம் வரை, அதாவது ரூ.5 முதல் ரூ.30 வரை கட்டணம் உயர்த்தப்படவுள்ளது. சுங்கச்சாவடிகளின் கட்டண உயர்வு வாடகை ஓட்டுநர்களை கவலையடையச் செய்துள்ளது. இது தொடர்பாக கனரக வாகன ஓட்டுநர்கள் கூறும்போது, சுங்கச் சாவடிகளில் 5 சதவீதம் மட்டுமே கட்டணம் உயர்த்துவதாகக் கூறப்படுகிறது. ஆனால், டிரக்குக்கான பாஸ்டேக் ரீசார்ஜ் செய்யும் தொகை ரூ.20 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை அதிகரிக்கும். இது எங்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் சரக்கு போக்குவரத்துக்கான கட்டணம் உயரும். அதன் மூலம் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை 5 முதல் 8 சதவீதம் அதிகரிக்கக் கூடும். எனவே, இந்த கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!