நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 816 சுங்கச்சாவடிகளில் வாகனங்களுக்கான கட்டணம் ரூ.85 முதல் ரூ.470 வரை வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் ஏப்ரல், செப்டம்பர் மாதங்களில் சுங்கச்சாவடிக் கட்டணம் உயர்த்தப்படுகிறது. தமிழகத்தில் 54-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் உள்ளன. இவற்றில் கடந்த ஏப்ரல் மாதம் 29 சுங்கச்சாவடிகளில் ரூ.5 முதல் 55 வரை கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில், மீதமுள்ள 25-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் இன்று (ஆக.31) நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலாகிறது. நான்கு சக்கர வாகனங்களுக்கு ஒருமுறைக்கான கட்டணம் ரூ.85-ல்இருந்து ரூ.90, இருமுறை கட்டணம் ரூ.125-ல்இருந்து ரூ.135, இலகு ரக வாகனங்களுக்கு ரூ.145-லிருந்து ரூ.160, இருமுறை கட்டணம் ரூ.220-லிருந்து ரூ.240, கனரக வாகனங்களில் லாரி, பேருந்துக்கு ரூ.290-ல் இருந்து ரூ.320, இருமுறைக்கு ரூ.440-ல்இருந்து ரூ.480, மிக கனரக வாகனங்களுக்கு ஒருமுறைக்கு ரூ.470-ல் இருந்து ரூ.515, இருமுறைக்கு ரூ.705-லிருந்து ரூ.770 என கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, ஒருமுறை பயணத்துக்கு ரூ.5 முதல் ரூ.45 வரையும், இருமுறைப் பயணத்துக்கு ரூ.10 முதல் ரூ.65 வரையும் கட்டணம் உயர்ந்துள்ளது.