கோடை விடுமுறைக்கு பின்னர் இன்று தமிழ்நாட்டில் பள்ளிகள் திறந்தன. 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறந்ததால் காலையிலேயே குழந்தைகள் ப பள்ளிக்கு புறப்பட்டனர். ஏறத்தாழ 40 நாள் விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பள்ளிகளுக்கு சென்றனர். அங்கு சென்றதும் நண்பர்கள், தோழிகளுடன் கோடை விடுமுறை அனுபவங்களை பகிர்ந்து புதிய வகுப்புகளில் அமர்ந்தனர். இந்த ஆண்டு புதிதாக பள்ளிகளில் சேர்க்கப்பட்ட எல்கேஜி, யூகேஜி குழந்தைகள் அழுது அடம் பிடித்து பள்ளிக்கு சென்றனர். அந்த குழந்தைகளை பெற்றோர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
பள்ளிகள் திறந்த இன்றைய தினமே தமிழ்நாடு முழுவதும் உள்ள 70 லட்சத்து 67 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படுகிறது. பள்ளிகள் தொடங்கியதும் புத்தகங்கள் வழங்கும் பணி நடந்தது., 60 லட்சத்து 75 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு நோட்டுகளும், 8 லட்சத்து22 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு புவியியல் வரைபடமும் வழங்கப்பட உள்ளன.
கல்வியாண்டை உற்சாகமாக தொடங்க உதவும் வகையில், கல்வியாண்டின் முதல் நாளிலேயே இவை வழங்கப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டு இருந்தது. இவை தவிர்த்து, தமிழக அரசின் சார்பில் புத்தகப்பை, காலணி, மழைக்கோட்டு, சீருடைகள், வண்ண பென்சில் மற்றும் கிரையான்கள், ஜாமின்ட்ரி பாக்ஸ் உள்ளிட்டவையும், அவை அவசியப்பபடும் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட உள்ளன. மேலும், புதிய இலவச பஸ் பயண அட்டைகள் வழங்கப்படும் வரை ஏற்கனவே உள்ள பழைய அட்டையை பயன்படுத்தி மாணவர்கள் கட்டணமின்றின்றி அரசு பஸ்களில் சீருடையுடன் பயணிக்கலாம் என போக்குவரத்து துறை அறிவித்தது. அதன்படி பழைய பாஸ்களை காட்டியே குழந்தைகள் பயணித்தனர். பெரும்பாலும் பள்ளி குழந்தைகளை பார்த்ததும் கண்டக்டர்கள் பாஸ்கள் பற்றி கேட்கவே இல்லை. அவர்களை அப்படியே அனுமதித்தனர்.