புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மகாளய அமாவாசை என அழைக்கப்படுகிறது. மறைந்த முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்கு மிகவும் உகந்த நாளாக கருதப்படுகிறது. ஆடி,தை அமாவாசைகளில் திதி கொடுக்காதவர்கள் புரட்டாசி மாதத்தில் மகாளய அமாவாசை தினத்தில் தர்ப்பணம் கொடுப்பார்கள்.
இன்று மகாளய அமாவாசையை முன்னிட்டு, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக பொதுமக்கள் நீர்நிலைகளில் குவிந்தனர். திருச்சி மாவட்டத்தில் காவிரி கரைகளில் பல இடங்களில் தர்ப்பணம் கொடுக்கப்பட்டாலும், ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் தர்ப்பணம் கொடுப்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. என்பதால், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மக்கள் இன்று அதிகாலையிலேயே அம்மா மண்டபம் வந்தனர்.
இதற்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. பலத்த போலீஸ் காவலும் போடப்பட்டு உள்ளது. காவிரியில் தண்ணீர் அதிகமாக வருவதால், பக்தர்கள் பாதுகாப்புக்காக தீயணைப்பு வீரர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தனர்.
வழக்கமாக தினந்தோறும் அம்மா மண்டப படித்துறையில் தர்ப்பண சடங்குகள் நடைபெறும் என்றாலும் இன்று ஆயிரக்கணக்கான மக்கள் வந்திருந்தனர். இதற்காக புரோகிதர்களும் ஏராளமானோர் வந்திருந்தனர். ஆனாலும் கூட்டம் அதிகமாக இருந்ததால், 10 பேர், 15 பேர் என வரிசையாக வைத்து ஒரே நேரத்தில் மந்திரங்கள் சொல்லி தர்ப்பண சடங்குகளை புரோகிதர்கள் நடத்தினர்.
அதன் பிறகு பிண்டங்களை ஆற்றில் விட்டு விட்டு காவிரியில் நீராடி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், உச்சிபிள்ளையார் கோவில் என பல கோவில்களுக்கு சென்று சாமிதரிசனம் செய்தனர்.
இதுபோல முக்கொம்பு, முசிறி காவிரி ஆறு, கல்லணை, தஞ்சை மாவட்டம் திருவையாறு புஷ்ப மண்டப படித்துறை, கும்பகோணம் காவிரி, மகாமக குளம், சுவாமிமலை காவிரி ஆறு, மயிலாடுதுறை காவிரி ஆறு, பூம்புகார் உள்பட காவிரி கரைகள் தோறும் இன்று தர்ப்பண சடங்குகுள் நடந்தது.
இதுபோல வேதாரண்யம், கோடியக்கரை கடலிலும், பூம்புகார் கடலிலும் இன்று அதிகாலை முதல் தர்ப்பணங்கள் நடந்து வருகிறது.
தமிழ்நாட்டில் தர்ப்பண சடங்குகள் அதிகமாக நடக்கும் இடம் ராமேஸ்வரம் கடல். இன்று அதிகாலை முதல் அங்கு தர்ப்பண சடங்குகள் நடந்தது. இதனால் ராமேஸ்வரத்தில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது.
சென்னையில், திருவொற்றியூர் கடற்கரை பகுதி, மயிலாப்பூர் கபாலீசுவர் கோவில் தெப்பக்குளம் உள்ளிட்ட கோவில் தெப்பக்குளங்கள், நீர் நிலைகளில் இன்று அதிகாலை முதலே பொதுமக்கள் புனித நீராடி மறைந்த தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகிறார்கள்.