தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட 10க்கும் மேற்பட்ட மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி. ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பினார். இதனை தொடர்ந்து தமிழக சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடத்தப்பட்டு ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்கல் மீண்டும் நிறைவேற்றப்பட்டது. மேலும் அந்த மசோதாக்கள் மீண்டும் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதனை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார். சட்டமன்றத்தில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாவை குடியரசுத் தலைவருக்குத் தமிழ்நாடு ஆளுநர் ரவி அனுப்பியிருப்பது சட்டவிரோதம் என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளது.
இந்நிலையில் மசோதாக்கள் நிலுவையில் உள்ள விவகாரம் தொடர்பாக, இன்று மாலை ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்க உள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ஆளுநருக்கு எதிரான வழக்கில், தமிழ்நாடு முதலமைச்சரை சந்தித்து பேசி முடிவு எட்ட வேண்டுமென ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்த நிலையில், இன்று மாலை சந்திக்கிறார். ஆண்டின் முதல் பேரவை தொடர் அடுத்த மாதம் தொடங்கவுள்ளதால் ஆளுநருக்கு அழைப்பு விடுவிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.