அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில், மாற்றுத்திறனாளிகள் தினத்தினை முன்னிட்டு ஒற்றுமையை வளர்ப்போம் உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.ரத்தினசாமி வாசிக்க அனைத்து துறை அரசு அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர்.
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3 சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்றையதினம் மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு ஒற்றுமையை வளர்ப்போம் உறுதிமொழியான “சிறப்புக் கவனம் தேவைப்படும் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்காகவும் அவர்களின் நலனுக்காகவும் எப்போதும் உடன் நிற்போம் என்றும், அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டுத் தளத்தில் அவர்களுக்கு இருக்கக்கூடிய சிக்கல்கள் குறித்த விழிப்புணர்வை உருவாக்க எங்களாலான அனைத்து முயற்சிகளையும் செய்வோம் என்றும் உறுதி கூறுகிறோம்.
முழுமையாகவும், சமத்துவத்துடனும் வெற்றிகரமாகவும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் இங்கு எந்தப் பாகுபாடும் இன்றி, அனைத்து உரிமைகளையும் பெற்று வாழ்வதற்குரிய பாதுகாப்பை அவர்களுக்கு அளிப்பது இன்றியமையாதது என நாங்கள் உணர்ந்திருக்கிறோம். அவர்களை எங்கள் குடும்பத்தில் ஒருவராக கருதி நட்புணவர்வை வளர்ப்போம் என்றும் உறுதிமொழி ஏற்கிறோம்” என மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.ரத்தினசாமி வாசிக்க, அனைத்து அரசு அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர்.
மேலும், மாற்றுத்திறனாளிகளின் நல்வாழ்விற்காக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில், மாவட்ட ஆட்சியரத்தில் ஊதா (Purple) நிறத்தில் ஒளியூட்டப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பரிமளம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மஞ்சுளா, மாவட்ட நிலை அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.