கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக வெப்பம் குறைந்துள்ள நிலையில் இன்று தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களுக்கு கன மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம் . சென்னையின் அண்டை மாவட்டங்களான செங்கல்பட்டு , காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கூடிய கன மழை பெய்யும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
இவை தவிர விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கும் சூறைக்காற்றுடன் கூடிய கன மழைக்கான எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரை இடி, மின்னனுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் காற்று அதிகம் இருக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேநேரம் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை ஆகிய 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. இந்த மாவட்டங்களில் 7 – 11 செமீ மழைக்கு வாய்ப்பிருப்பதாகக் கூறி இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.