துருக்கி மற்றும் சிரியாவில் நேற்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது இது ரிகடர் அளவில் 7.8 ஆக பதிவாகி இரந்தது. தொடர்ந்து அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து போனது. துருக்கியில் எங்கு பார்த்தாலும் கட்டிட குவியல்களாக காட்சி அளிக்கிறது. துருக்கி, சிரியாவில் இதுவரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் இன்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவானது. இதனால் மீட்பு பணி சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. அதன் பிறகு மீண்டும் மீட்பு பணி தொடங்கிய நிலையில் இன்று மதியம் 2வது முறையாக கிழக்கு துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவானது.
இதற்கிடையே இந்தியா உள்பட 20க்கும் மேற்பட்ட நாடுகளின் மீட்பு படையினர் அங்கு முகாமிட்டு மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்தியாவில் இருந்து சுமார் 150 பேர் கொண்ட பேரிடர் மீட்பு படையினர் துருக்கியில் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் பல மோப்பநாய்களுடன் அங்கு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இடிபாடுகளில் மோப்பநாய்கள் மூலம் யாரும் சிக்கி உள்ளனரா என கண்டறிந்து அங்கு உள்ள மக்களை மீட்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே இறந்தவர்கள் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தொடும் என மீட்பு பணியில் உள்ளவர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையே சொந்த பந்தங்களை இழந்த மக்கள் கண்ணீர் விட்டு கதறும் காட்சி அந்த நாடு முழுவதும் மரண ஓலங்களாக காணப்படுகிறது.