திமுக அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என கட்சியினருக்கு அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான மகேஸ் பொய்யாமொழி அறிவுறுத்தினார்.
திருச்சி தெற்கு மாவட்டம் கிழக்கு மாநகரம், பொன்மலை பகுதி திமுக பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியதாவது:-
திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் கூறுவதைப் போன்று வரும் 2026ஆம் ஆண்டு சட்டப் பேரவை தேர்தலில் 200 தொகுதிகளை கைப்பற்றும் வகையில் கட்சியினர் ஒவ்வொருவரும் பணியாற்ற வேண்டும். திமுக அரசின் திட்டங்களால் தமிழகத்தில் பயன்பெறாத நபர்கள் ஒருவர் கூட இல்லை. வீட்டில் ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு வகையில் திராவிட மாடல் அரசின் திட்டத்தை பெற்று பலன் பெற்றிருப்பர். எனவே, அரசின் திட்டங்களையும், அதன் செயல்பாடுகளையும் மக்களிடம் தவறாமல் கொண்டு சேர்க்க வேண்டும்.
தேர்தலுக்கு முன்பாக தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் வாக்காளர் பட்டியல் திருத்த முகாமில் முழுமையாக பங்கேற்க வேண்டும். அந்தந்த வாக்குச்சாவடிக்குள்பட்ட பாக முகவர்கள் கவனமுடன் செயல்பட வேண்டும்.
வாக்காளர்கள் பட்டியலில் இறந்தவர்கள் இடம்பெற்றிருந்தால் அதனை கண்டறிந்து நீக்கம் செய்ய வேண்டும். 18 வயது பூர்த்தியடைந்த புதிய வாக்காளர்களின் பெயர்களை தவறாமல் வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் பணியையும் சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். 2026 தேர்தலில் 200 என்ற இலக்கை அடைய அடைவதை குறிக்கோளாகக்கொண்டு பணியாற்ற வேண்டும்.
தமிழக அரசு கொண்டுவந்துள்ள மகளிர் உரிமைத் தொகை, இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களையும் மக்களிடம் எடுத்துக்கூறி ஆதரவு திரட்டவேண்டும். மக்களை அடிக்கடி சந்தித்து அரசின் திட்டங்கள் குறித்து பேசவேண்டும். மக்கள் எப்போதும் திராவிட மாடல் அரசுக்கு ஆதரவாக இருப்பர் . இவ்வாறு அமைச்சர் மகேஷ் பேசினார். இக் கூட்டத்தில், மாநகரச் செயலாளர் மு. மதிவாணன், திருவெறும்பூர் சட்டப் பேரவை தொகுதி பார்வையாளர் மணிராஜ், பகுதி செயலாளர் கொட்டப்பட்டு இ.எம்.தர்மராஜ், மாநகர துணைச் செயலர் சரோஜினி மற்றும் வாக்குச்சாவடி பாக முகவர்கள், கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர்.