தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அரசுத் துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் அறிவிப்புகளை வெளியிட்டு, தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்தவகையில் 2024-ம் ஆண்டுக்கான ஆண்டு அட்டவணையை டி.என்.பி.எஸ்.சி. ஏற்கனவே வெளியிட்டு இருந்தது.இந்த நிலையில் தற்போது திருத்தப்பட்ட புதிய அட்டவணையை டி.என்.பி.எஸ்.சி. நேற்று வெளியிட்டுள்ளது. குறிப்பாக ஏற்கனவே வெளியிட்டு இருந்த அட்டவணையில் குறிப்பிட்டிருந்த குரூப்-2, 2ஏ பதவிகளுக்கான அறிவிப்பு, காலிப்பணியிடங்கள், தேர்வுத்திட்டம், தேர்வு தேதி ஆகியவற்றை மாற்றி அமைத்துள்ளது.
அதன்படி, குரூப்-2, 2ஏ பணியிடங்கள் 1,264 ஆக இருந்ததை 2 ஆயிரத்து 30 ஆக அதிகரித்துள்ளது. காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு ஜூன் மாதத்தில் வெளியிடப்பபட்டு, செப்டம்பர் மாதத்தில் முதல்நிலைத் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கு முந்தைய அட்டவணையில் ஆகஸ்டு மாதம் தேர்வு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதுதவிர, தேர்வு நடைமுறையும் மாற்றப்பட்டு இருக்கிறது. குரூப்-2 பதவிகளுக்கு இதுவரை நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது அது மாற்றப்பட்டுள்ளது. இனி குரூப்-2 பதவிகளுக்கு நேர்முகத் தேர்வு கிடையாது. 6,,244 குரூப்-4 பதவிகளுக்கான தேர்வு ஜூன் மாதம் 9-ந்தேதி நடக்கிறது. இதுதவிர மேலும் சில பதவிகளுக்கான பணியிடங்களும், அதற்கான தேர்வு தேதிகளும் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. இந்த அட்டவணையை தேர்வர்கள் https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் சென்று தெரிந்துகொள்ளலாம்.