2025-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு அட்டவணையை டிஎன்பிஎஸ்சி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிட்டது. அதில் குருப்-1 தேர்வு, குருப்-4 தேர்வு, குருப் 2 மற்றும் 2 ஏ தேர்வு உள்பட மொத்தம் 7 போட்டித்தேர்வுகளுக்கான அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.
அதன்படி குருப்-1 தேர்வுக்கான அறிவிப்பு ஏப்ரல் 1-ம் தேதியும், அதிக எண்ணிக்கையிலான தேர்வர்கள் பங்கேற்கக்கூடிய ஒருங்கிணைந்த குருப்-4 தேர்வுக்கான அறிவிப்பு ஏப்ரல் 25-ம் தேதியும் வெளியிடப்பட வேண்டும். வழக்கமாக வருடாந்திர தேர்வு அட்டவணையில் வெளியிடப்படும்போதே காலியிடங்களின் எண்ணிக்கையும் தோராயமாக தெரிவிக்கப்படும்.
ஆனால், இந்த ஆண்டு அதுபோன்று காலியிடங்களின் விவரம் குறிப்பிடப்படவில்லை. இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது :
உதவி சுற்றுலா அலுவலர், உதவி பொறியாளர் உள்ளிட்ட ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணி தேர்வுக்கான (நேர்காணல் இல்லாதது) மதிப்பெண் மற்றும் தரவரிசை பட்டியல் கடந்த பிப்ரவரி 20-ம் தேதி அன்று வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஆன்லைன் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தகுதி பெற்றவர்களின் பட்டியல் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் அதற்கான பட்டியல் வெளியிடப்படும். அதேபோல், குருப்-1-சி தேர்வின் கீழ் வரும் மாவட்ட கல்வி அதிகாரி பதவிக்கான முதல்நிலைத்தேர்வு முடிவை உயர்நீதிமன்ற வழக்கு காரணமாக வெளியிட முடியவில்லை. தேர்வு முடிவை வெளியிட சட்ட ரீதியிலான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.