Skip to content

காங்., மாநிலத்தலைவரான செல்வப்பெருந்தகை.. ஏற்கனவே 4 கட்சிகளில் இருந்தவர்…

ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மணிமங்கலம் எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வப்பெருந்தகை. திருப்பதியில் உள்ள வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் இளங்கலை சட்டப் படிப்பையும், சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.ஏவும் படித்தவர்.  தனது அரசியல் வாழ்க்கையை பூவை மூர்த்தி தலைமையிலான புரட்சி பாரதம் கட்சியில் இருந்து துவக்கியவர் செல்வப்பெருந்தகை. பின்னர், புரட்சி பாரதம் கட்சியில் இருந்து இருந்து விலகி டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையிலான புதிய தமிழகம் கட்சியில் இணைத்தார். கிருஷ்ணசாமி உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அக்கட்சியில் இருந்தும் விலகி தொல். திருமாவளவன் தலைமையிலான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இணைந்தார். விசிக சார்பாக 2006 ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் மங்களூர் தொகுதியில் போட்டியிட்டு முதல் முறையாக எம்.எல்.ஏ ஆனார்.  அதன் பின்பு திருமாவளவன் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகி பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்தார். அக்கட்சியின் மாநில தலைவராக செல்வப்பெருந்தகைக்கு பொறுப்பு வழங்கப்பட்டது. சுமார் 2 ஆண்டுகள், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராகச் செயல்பட்டு வந்த செல்வப்பெருந்தகை அதன் பிறகு பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து விலகி கடந்த 2010ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார் செல்வப்பெருந்தகை. 2011 சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் கட்சி சார்பில் செங்கம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். மீண்டும் 2016 சட்டசபை தேர்தல் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்றத் தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனார். அதைத்தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் தான், கேஎஸ் அழகிரிக்கு பதிலாக, தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் செல்வப்பெருந்தகை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *