தமிழ்நாடு சுன்னத் ஜமாஅத் என்ற இஸ்லாமிய அமைப்பு சார்பாக ஏராளமானோர் திரண்டு வந்து, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தமிழக வெற்றிக்கழகத் தலைவர் நடிகர்விஜய் மீது பரபரப்பு புகார் மனு ஒன்றை நேற்று கொடுத்தனர். அந்த அமைப்பின், பொருளாளர் சையது கவுஸ் என்பவர் புகார் மனுவில் கையெழுத்திட்டுள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:
கடந்த 7-ந்தேதி அன்று, தமிழக வெற்றிக்கழகம் சார்பில் இப்தார் விருந்து நிகழ்ச்சி நடந்தது. இப்தார் நிகழ்ச்சி என்பது மிகவும் கண்ணியமான நிகழ்ச்சியாகும். இது மாநாடு மற்றும் பொதுக்கூட்டங்கள் போன்றது அல்ல. விஜய் நடத்திய இப்தார் நிகழ்ச்சி கண்ணியமான இப்தார் நிகழ்ச்சிக்கு விரோதமாக நடத்தப்பட்டது.
அதில், இப்தார் நிகழ்ச்சி நோன்புக்கு சம்பந்தமே இல்லாத குடிகாரர்களும், ரவுடிகளும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு வந்த உண்மையாக நோன்பை கடைபிடித்தவர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் தாக்கப்பட்டனர். பவுன்சர்கள் மூலம் அடித்து, உதைத்து வெளியே தள்ளப்பட்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு நடிகர் விஜய் ஒன்றரை மணி நேரத்துக்கு முன்பே வந்தது தவறு.
நோன்பு திறக்கும் நேரத்திற்கு 10 நிமிடத்திற்கு முன்பாக அவர் வந்திருக்க வேண்டும். அவர் நடத்திய இப்தார் நிகழ்ச்சி, விதிமுறைகளுக்கு மாறாக நடந்ததால் உரிய சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நடிகர் விஜய் மீது வழக்குப்பதிவு செய்யவேண்டும் என்று எங்கள் அமைப்பு சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.