சென்னை நேற்று சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ்தலைவர் அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது.. பா.ஜனதா கூட்டணியில் இருந்து ஏன் விலகினோம் என்பதற்கான காரணத்தை அ.தி.மு.க. இதுவரை மக்களிடம் தெரிவிக்கவில்லை. எனவே, பா.ஜனதா – அ.தி.மு.க. இடையே கள்ள உறவு இருப்பதாகவே நாங்கள் கருதுகிறோம். கூட்டணியில் ஒரு தொகுதியில் ஒரு கட்சி தொடர்ந்து நின்றால், அந்த தொகுதியில் இன்னொரு கட்சிக்கு வாய்ப்பு கிடைக்காது. உடனே அங்குள்ள அந்த கட்சி தொண்டர்கள் நாங்கள் என்ன இவர்களுக்கு வேலை செய்து கொண்டே இருப்பதுதான் நமது வேலையா? என்று கேட்பார்கள். இது தமிழ்நாட்டில் எல்லா கட்சிகளுக்கும் பொருந்தும். காங்கிரஸ் கட்சியிலும் இது போல கேட்பார்கள். சென்னையில் ஒரு தொகுதி வாங்கி கொடுத்தால் என்ன? சென்னை என்ன தி.மு.க.வுக்கு தான் கொடுக்க வேண்டுமா? என என்னிடமே பலர் கேட்டார்கள். உங்களுக்காக நான் கேட்கிறேன் என்று சொல்லி இருக்கிறேன். இது இயல்பு. இவ்வாறு கே.எஸ்.அழகிரி கூறினார்.