நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் மூன்று தொகுதிகளில் போட்டியிட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி படுதோல்வியை தழுவியது. இந்நிலையில் அக்கட்சியின் இளைஞரணி தலைவர் யுவராஜா ராஜினாமா செய்துள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசனிடம் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்வது குறித்து முறைப்படி கடிதத்தை யுவராஜா கொடுத்துள்ளார். அதில், எதிர்வரும் காலங்களில் கட்சியின் கட்டமைப்பை சிறப்பாக கட்டமைக்க அயராது பாடுபடுவேன் என்றும் தலைவரான உங்களுடன் கட்சியின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பயணித்து, அயராது உழைத்து பாடுபடுவேன் என்று தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலுக்கு முன்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை யுவராஜா சந்தித்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது அவர் தலைவர் பதவியை ராஜினாமா செய்திருப்பது அக்கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.