Skip to content
Home » குட்கா வழக்கு.. மாஜி டிஜிபி மீது சிபிஐ விசாரணைக்கு அனுமதி…

குட்கா வழக்கு.. மாஜி டிஜிபி மீது சிபிஐ விசாரணைக்கு அனுமதி…

தமிழகத்தில் குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு கடந்த 2015-ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு செங்குன்றம் பகுதியில் மாதவராவ் என்பவருக்கு சொந்தமான கிடங்கில் சட்ட விரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி கைப்பற்றினர். அப்போது தமிழக அமைச்சர்கள், மத்திய, மாநில அரசு உயர் அதிகாரிகளுக்கு பெரும் தொகை லஞ்சமாக கொடுக்கப்பட்டதற்கு ஆதாரமாக ஒரு டைரியையும் பறிமுதல் செய்தனர். அப்போதைய அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ரமணா மற்றும் முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட பலர் இந்த ஊழல் சர்ச்சையில் சிக்கினர்.

குட்கா ஊழல் தொடர்பாக திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது. இந்த வழக்கில் இதுவரை மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி செந்தில்முருகன், மத்திய கலால்துறை அதிகாரி நவநீத கிருஷ்ண பாண்டியன், சுகாதாரத் துறை அதிகாரி சிவக்குமார் ஆகிய 6 பேர் கடந்த 2016-ம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் சிபிஐ போலீஸார் கடந்த 2021-ம் ஆண்டு சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில், மாதவராவ் உள்ளிட்ட 6 பேரின் பெயர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரிகள் டி.கே.ராஜேந்திரன், ஜார்ஜ் உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிஐ-க்கு தமிழகஅரசு கடந்த ஆண்டு ஜூலையில் அனுமதி வழங்கியது. அதேபோல், இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட முன்னாள் தமிழக காவல்துறை டிஜிபிடி.கே.ராஜேந்திரன் மற்றும் முன்னாள் சென்னை காவல் ஆணையர் ஜார்ஜ் ஆகிய இருவரும் ஐபிஎஸ் அதிகாரிகள் என்பதால், அவர்கள் மீது வழக்கு தொடரவும், விசாரணை நடத்தவும் மத்திய உள்துறைஅமைச்சகத்திடம் சிபிஐ அனுமதியை பெற்றுக் கொள்ளலாம் எனவும் தமிழக அரசு சிபிஐ-க்கு பதில் கடிதம் அனுப்பியது. இந்நிலையில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிகளான ஜார்ஜ் மற்றும் டி.கே.ராஜேந்திரன் மீது வழக்கு தொடர்ந்து, விசாரணை நடத்த அனுமதி கேட்டு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு சிபிஐ சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *