சிவனடியார்கள் கையில் திருவோடு வைத்திருப்பார்கள். இந்த திருவோடு எளிதில் கிடைப்பதில்லை. இது ஒரு மரத்தின் காயில் இருந்து கிடைப்பதாக கூறுகிறார்கள். திருவோடு மரத்தின் பூர்வீகம், தெற்கு மெக்ஸிகோ மற்றும் மத்திய அமெரிக்காவில் இருந்து தெற்கில் உள்ள கோஸ்டா ரிக்கா வரையான பகுதிகள். திருவோடு மரத்தில் சில வகைகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்திய பெருங்கடலில் உள்ள சீசெல் தீவு பகுதிகளிலும் இந்த மரம் இருப்பதாக சொல்கிறார்கள்.மரத்திற்கு மரம் இலைகளும், காய்களின் வடிவமைப்புகளும் கூட மாறுபடுகின்றன.
திருவோடு மரத்தில் ஆண், பெண் பிரிவு உண்டு. பூ மலர்ந்து காயாக 10 வருடங்கள் பிடிக்கும் என்கிறார்கள். பூக்கள் நறுமணம் கொண்டது. தற்போது தஞ்சை மாவட்டத்தில் ஒரு கோவிலிலும் திருவோடு மரம் இருப்பதாக அந்த பகுதி மக்கள் கூறுகிறார்கள். அந்த மரம் கன்றாக வைக்கப்பட்டு 5 வருடத்தில் தற்போது 2 காய்களை காய்த்து உள்ளது.
அய்யம்பேட்டை அடுத்த சக்கராப்பள்ளி அருள்மிகு தேவநாயகி சமேத சக்கரவாகேசுவரர் திருக்கோவில் உள்ளது. இந்த ஆலயத்தின் பிரகாரத்தில் வித்தியாசமான ஒரு மரம் உள்ளது. 5 வருடத்திற்கு முன் கன்றாக வைக்கப் பட்டு தற்போது மரமாகி, காய் காய்த்துள்ளது. இந்த காய் தான் திருவோடு தயாரிக்க பயன்படுகிறது என அந்த பகுதி மக்கள் கூறுகிறார்கள். தற்போது மரத்தில் 2 காய்கள் உள்ளது. இந்த காய் முற்றிவிட்டால் அதனை நீளவாக்கில் வெட்டி காய்க்குள் இருக்கும் தசைபகுதிகளை அகற்றிவிட்டு காயவைத்தால் திருவோடு கிடைக்கும். ஒருகாயில் 2 திருவோடு கிடைக்கும் என அந்த பகுதி மக்கள் கூறுகிறார்கள். தஞ்சை மாவட்டத்தில் இந்த மரம் வேறு எங்கும் இல்லை. இது திருவோடு் மரம் என்று அதனை பேணி வளர்க்கிறார்கள். உண்மையில் அது திருவோடு மரம்தானா என்பதை தோட்டக்கலைத்துறை உறுதி செய்யவேண்டும்.