திருச்சி திருவெறும்பூர் பகவதிபுரத்தை சேர்ந்தவர் விமலன், இவரது மனைவி ஸ்ரீநிதி(26) நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். பிரசவத்திற்காக ஸ்ரீநிதி திருவெறும்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சில நாட்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டார். நேற்று மாலை அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அப்போது அங்கு டாக்டர்கள் இல்லை.
எனவே நர்சுகள் பிரசவம் பார்த்து உள்ளனர். ஆனால் ஸ்ரீநிதிக்கு குழந்தை(ஆண்) இறந்தே பிறந்தது. அதை நர்சுகள் உடனடியாக சொல்லவில்லை. வெகுநேரம் கழித்தே சொல்லி உள்ளனர். டாக்டர் இல்லாமல் பிரசவம் பார்த்ததால் தான் குழந்தை இறந்ததாக கூறி விமலன் மற்றும் ஸ்ரீநிதி உறவினர்கள் 150 பேர் மருத்துவமனை முன் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடனடியாக அங்கு டாக்டர்கள் வந்தனர். தொப்புள்கொடி குழந்தை கழுத்தை சுற்றி இருந்ததால் குழந்தை இறந்து விட்டதாக டாக்டர்கள் விளக்கம் அளித்தனர். இதை விமலன் உறவினர்கள் ஏற்கவில்லை. எனவே அந்த பகுதியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் வந்து நள்ளிரவு வரை பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் அவர்கள் சமாதானம் அடையவில்லை.
திருவெறும்பூர் போலீசார் வந்து விசாரித்து வழக்குப்பதிவு செய்தனர். இறந்துபோன குழந்தையின் உடல் திருச்சி தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் பிறகு அவர்கள் சமாதானம் அடைந்தனர்.
திருவெறும்பூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதுமான மருத்துவர்கள் இருப்பதில்லை, ஸ்கேன் கருவி இயங்காமல் முடங்கி கிடக்கிறது என்பது உள்பட பல புகார்களை அந்த பகுதி மக்கள் தெரிவிக்கிறார்கள்.