Skip to content
Home » பக்தர்கள் வெள்ளத்தில் ஆழித்தேரோட்டம்… திருவாரூரில் கோலாகலம்

பக்தர்கள் வெள்ளத்தில் ஆழித்தேரோட்டம்… திருவாரூரில் கோலாகலம்

  • by Senthil

திருவாரூர் தியாகராஜர்  கோவிலுக்கு மேலும் பெருமை சேர்ப்பது ஆழித்தேர். பங்குனி திருவிழாவையொட்டி ஆண்டுதோறும் இந்த  தேரோட்டம் நடைபெறும்.  ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்ற பெருமைமிக்கது.  அத்தனை சிறப்பு வாய்ந்த  ஆழித்தேரோட்டம் இன்று திருவாரூரில் கோலாகலமாக நடந்தது.

திருச்சி பெல் நிறுவனம் சார்பில் இரும்பு அச்சுகள், 4 இரும்பு சக்கரங்கள், ஹைட்ராலிக் பிரேக் உள்ளிட்ட வசதிகள் ஆழித்தேரில் செய்யப்பட்டுள்ளது. தேரின் எடை 220 டன் ஆகும். இதன் மீது 5 டன் எடையுள்ள பனஞ்சப்பைகள், 50 டன் எடையுள்ள கயிறு, 500 கிலோ எடையுள்ள அலங்கார துணிகள் ஆகியவற்றை பயன்படுத்தி தேர் அலங்கரிக்கப்படுகிறது.

இதுதவிர தேரின் முன்புறம்  4 குதிரைகள், யாளி, பிரம்மா உள்ளிட்ட பொம்மைகள் கட்டப்பட்டு அலங்கார தட்டுகள் ஆகியவற்றுடன் ஆழித்தேரின் மொத்த எடை 350 டன்னாகும். தேரை இழுக்க சுமார் 21 அங்குலம் சுற்றளவு கொண்ட 425 அடி நீளம் கொண்ட 4 வடங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் எடை 4 டன். தேரின் பின்புறம் தள்ள 2 புல்டோசர்கள், 4 வீதிகளில் தேரை திரும்பவும், செலுத்தவும் முட்டுகட்டைகள், இரும்பு தகடுகள் பயன்படுத்தப்படுகிறது. தேரோடும் 4 வீதிகளிலும் தேர் அசைந்து ஆடி திரும்பும் அழகை காண கண்கள் கோடி வேண்டும் என்பார்கள். ஆழித்தேர் வடம் பிடித்தால்  வைகுண்டத்தில்  இடம் பிடிக்கலாம் என்பது ஐதீகம். ஆழித்தேரோட்டத்தையொட்டி திருவாரூர் நகரமே திருவிழா கோலம் பூண்டுள்ளது.

ஆழித்தேர் புறப்படுவதற்கு முன்னதாக அம்பாள், சண்டிகேஸ்வரர் வடம் பிடிக்கப்பட்டது.  காலை 5.15 மணிக்கு விநாயகர், சுப்பிரமணியர் தேர் வடம் பிடிக்கப்பட்டு தேரோட்டம் நடைபெற்றது. இதையடுத்து திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவில் ஆழித்தேரோட்டம் இன்று காலை மிகச்சிறப்பாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். ஆழித்தேரை 4 வீதிகளில் ஆடி அசைந்து வரும்ஆழித்தேரின் அழகை காண பக்தர்கள் குவிந்தனர். தேரோட்ட விழாவையொட்டி சன்னதி தெரு உள்ளிட்ட கோவில் 4 திசைகளில் பல் பொருள் கடைகள் திறக்கப்பட்டுள்ளது. வெளிமாவட்டங்களில் இருந்து சிவனடியார்கள் , பொதுமக்கள் திருவாரூர் வந்துள்ளனர். ஆழித்தேரோட்ட விழாவில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

ஆழித்தேரோட்டத்தையொட்டி திருவாரூருக்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!