சொத்துக்களை அபகரித்துக்கொள்வதற்காக பணக்காரர்களை தங்கள் பிடிக்குகள் கொண்டு வந்து சித்ரவதை செய்து சொத்துக்களை அபகரிக்கும் பல சினிமாக்களை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் அந்த கொடூரங்களை எல்லாம் மிஞ்சும் வகையில், திருவாரூர் மாவட்டத்தில் ஒரு உண்மை சம்பவம் நடந்துள்ளது. அதைப்பற்றி பார்ப்போம்.
முத்துப்பேட்டை அடுத்த தில்லைவிளாகம் மேலக்கரை கிராமத்தை சேர்ந்தவர் பழனித்துரை, 10 வருடங்களுக்கு முன் இறந்து விட்டார். இவரது மனைவி ஜெயம். 65 வயது . இவருக்கு குழந்தைகள் இல்லை . எனவே இவர் மட்டும் வீட்டில் வசித்து வந்தார். இவருக்கு சொந்தமான நிலபுலன்கள் உள்ளன. வாரிசுகள் யாரும் இல்லாததால் இவரின் சொத்துக்களை அபகரித்துக்கொள்ளலாம் என திட்டம் போட்ட உறவினர்கள் சிலர், ஜெயத்தை பராமரிப்பதாக நாடகமாடி அவரை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
ஜெயம் எங்கும் சென்றால் யாரும் சொத்தை ஏமாற்றி எழுதி வாங்கிக் கொள்வார்கள் என பயந்த உறவினர் ஒருவர், ஜெயத்தை வீட்டிலேயே சிறைவைத்தார். அவருக்கு ஜன்னல் வழியாகத்தான் சாப்பாடு கொடுப்பார். அந்த வீட்டில் விளக்குகள் கிடையாது. ஜன்னல் வழியாக வரும் வெளிச்சத்தை பார்த்து தான் பகல், இரவு என ஜெயம் உணர்ந்து கொள்வார்.
சாப்பாடும் போதுமான அளவு கொடுப்பதில்லை. கொஞ்சம் கொஞ்சமாக உயிர் போகும் வகையில் வீட்டில் மிஞ்சிய சாப்பாட்டை தான் சிறிதளவு கொடுத்து வந்தனர். மாற்று உடையும் கொடுக்கவில்லை. ஒரே உடையுடன் அதே வீட்டில் இருந்த ஜெயம் நாளடைவில் உடல்நலம் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையானார். உடையும் கந்தல் ஆகிவிட்டது. சிலநேரங்களில் அதே வீட்டுக்குள் இயற்கை உபாதைகளையும் கழித்து வந்தார். இதனால் அந்த வீட்டுக்குள் இருந்து துர்நாற்றம் கிளம்பியது. 6 வருடமாக இந்த சித்ரவதை நடந்து வந்தது.
இதை அறிந்த பக்கத்துவீட்டுக்காரர்கள் ஜெயத்தை பராமரிப்பதாக கூறிவந்த நபரிடம் ஏன் இப்படி செய்கிறீர்கள் என கேட்டு உள்ளனர். அதற்கு அந்த நபர் பக்கத்த்து வீட்டுக்காரர்களை மிரட்டி உள்ளார். இது குறித்து சிலர் அந்த வீட்டில் மூதாட்டியை அடைத்து வைத்து உள்ள அறையையும், அவரையும் வீடியோ எடுத்து சமு்க வலைதளங்களில் வெளியிட்டனர். இதுமாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்.பி. கவனத்துக்கும் சென்றது.
உடனடியாக அந்த மூதாட்டியை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்க கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி அந்த மூதாட்டி தற்போது ஆஸ்பத்திரியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மூதாட்டி நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இதுகுறித்து மேலக்கரை கிராமத்தை சேர்ந்த வைரவமூர்த்தி என்பவர் கூறியதாவது: ஜெயம் நல்லா வாழ்ந்தவங்க. கௌரவமான குடும்பத்தை சேர்ந்தவர். ர தனியாக இருந்த இவரின் சொத்துக்களை அபகரிக்க பராமரிப்பு போன்று சுமார் 6வருடமாக வீட்டை பூட்டி வைத்து சிறை வைக்கப்பட்டார். ஆரம்பகட்டத்தில் தினமும் ஒரு வேளை சாப்பாடு கொடுத்தார். சில மாதங்களாக எப்போதாவது சாப்பாடு கொடுக்கிறார். ஜெயம் குளித்து பல வருடம் இருக்கும். இந்த கொடுமையை பார்த்துக்கொண்டு எங்களால் சும்மா இருக்க முடியவில்லை .இதுகுறித்து மாவட்ட ஆட்சியர், எஸ்பி முதல் லோக்கல் போலீஸ் வரை அனைவரின் கவனத்திற்கும் கொண்டு சென்றுவிட்டோம். கடைசியாக தமிழக அரசின் சைல்டு லைன் 14567நம்பருக்கும் தகவல் கூறினேன். எந்த நடவடிக்கையமில்லை . ஏனென்றால் , மூதாட்டியை சிறை வைத்த நபரிடம் சில அதிகாரிகள் கையூட்டு வாங்கி உள்ளனர் என சந்தேகப்படுகிறோம்.
சினிமாக்களில் கூட இதுபோன்ற கொடுமையை நாம் பார்த்திருக்கமாட்டோம். ஆனால் நிஜத்தில் அது நடந்துள்ளது. இனியாவது அதிகாரிகள் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.