திருவண்ணாமலை மாவட்டத்தில் பெஞ்சல் புயல் காரணமாக நேற்று முன்தினம் காலை முதல் கனமழை பெய்தது. தொடர்ந்து இடைவிடாமல் விடிய, விடிய பெய்த மழை நேற்றும் தொடர்ந்தது. பகல் வேளையில் மழையின் வேகம் அதிகரித்தது.
இதனால் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலுக்கு பின்புறம் அமைந்துள்ள மலை உச்சியில் சுமார் 100 அடி உயரத்தில் இருந்து பாறை ஒன்று உருண்டு வந்த பாறை, வ உ சி நகர் தெருவில் வீடுகளின் மீது விழுந்தது. இதில் இரு வீடுகளில் இருந்த 7 பேர் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது. தகவலறிந்து விரைந்துவந்த தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
திருவண்ணாமலையில் பாறைகள் உருண்டு விழுந்ததில் 3 வீடுகள் முற்றிலும் புதைந்து போனது. தற்போது சம்பவ இடத்தில் தேசிய பேரிடர் மீட்பு படை மீட்புப் பணியை தொடங்கி உள்ளது. வீட்டின் மீது விழுந்த பாறைகளை அகற்றும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டுஉள்ளனர்.
முன்னதாக பாறை சரிந்து விழுந்த பகுதியில் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் மற்றும் எஸ்.பி சுதாகர், தீயணைப்பு படை வீரர்கள் ஆகியோரும் விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போதும் மழை கொட்டிக்கொண்டிருந்ததால் உடனடியாக மீட்பு பணிகளை செய்ய முடியவில்லை.
பாறை விழுந்து அமுக்கியதில் ஒரு வீட்டில் மட்டும் 7 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. இடிபாடுகளை அகற்றிய பிறகு தான் இந்த விபத்து சேதம் பற்றிய விவரம் தெரியவரும்