Skip to content

திருவானைக்காவலில் இன்று எட்டுதிக்கு கொடியேற்று விழா

  • by Authour

திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேவரி கோவில் பங்குனி தேரோட்டத்தையொட்டி கோவில் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள எட்டுத்திக்கு கொடிமரங்களிலும் கொடியேற்றம் நடைபெற்றது.
பஞ்சபூதங்களில் நீர் தலமாக விளங்குவது திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில். இங்கு ஆண்டுதோறும் மாசி, பங்குனி மாதங்களில் மண்டல பிரம்மோற்சவ விழா 48 நாட்கள் கொண்டாடப்படும். இந்தாண்டுக்கான மண்டல பிரம்மோற்சவ விழா கடந்த 8-ந்தேதி பெரிய கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இவ்விழா வரும் ஏப்ரல் 15-ந்தேதி வரை நடைபெறுகிறது.
திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேவரி கோவிலில் பங்குனி தேரோட்டம் வரும் 30-ந்தேதி நடைபெறுகிறது.
தேர்த்திருவிழாவின் முதல் நாளான  இன்று  உற்சவர்கள் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி, ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பட்டு  காலை 11.05 மணியளவில் கொடிமரம் அருகே வந்தனர். அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

பின்னர் கோவில் மூன்றாம் பிரகாரத்தில் வலம் வந்தனர். அப்போது மூன்றாம் பிரகாரத்தில் உள்ள எட்டுத்திக்கு கொடிமரங்களிலும் கொடியேற்றம் நடைபெற்றது. கொடியேற்றத்தின் போது கோவில் யானை அகிலா கொடிமரங்களுக்கு மரியாதை செலுத்தியது.
விழாவின் 2ம் நாளான நாளை  (26-ந்தேதி) இரவு சுவாமி சூரியபிறை வாகனத்திலும், அம்மன் சந்திரபிறை வாகனத்திலும், 27ம் தேதி இரவு சுவாமி பூதவாகனத்திலும், அம்மன் காமதேனு வாகனத்திலும், 28-ந் தேதி சாமி கைலாச வாகனத்திலும், அம்மன் கிளி வாகனத்திலும், 29-ந் தேதி சாமி, அம்மன் வெள்ளி ரிஷபவாகனத்தில் எழுந்தருளி தெருவடைச்சானுடன் வீதி உலா வருகின்றனர்.
பங்குனி தேர்த்திருவிழா ஏப்ரல் 4-ந்தேதியுடன் நிறைவடைகிறது. இதனை தொடர்ந்து சொக்கர் உற்சவம், மௌனோத்ஸவம், சண்டிகேஸ்வரர் உற்சவம் நடைபெறுகிறது.
ஏப்ரல் 13-ந்தேதி பஞ்சப்பிரகார விழா நடைபெறுகிறது. அதையொட்டி சுவாமி அம்மன் வேடத்திலும், அம்மன் சுவாமி வேடத்திலும் வெள்ளி மஞ்சத்தில் எழுந்தருளி 5ம் பிரகாரத்தில் வீதி உலா வருகின்றனர். ஏப்ரல் 15-ந்தேதியுடன் பங்குனி மண்டல பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.

error: Content is protected !!