Skip to content

திருப்பூர் தம்பதி கொலையில், பக்கத்து வீட்டுக்காரர் சிக்கினார்

திருப்பூர் மாவட்டம்  அவிநாசி, துலுக்கமுத்தூர், ஊஞ்சபாளையம் கிராமத்தில் வசித்து வந்தவர் பழனிச்சாமி (வயது 84). இவரின் மனைவி பர்வதம் (வயது 70).  இந்த முதிய தம்பதி  தோட்டத்து வீட்டில்  தனியாக வசித்து வந்தனர்.

இவர்களின் குழந்தைகளுக்கு திருமணம் முடிந்து,  குடும்பத்துடன் வெளியூரில் வசித்து வருகிறார்கள். இதனால் தோட்டத்தில் தம்பதி மட்டும் தனியாக தங்கி இருக்கின்றனர்.

இன்று  காலை இவர்கள் நீண்ட நேரம் ஆகியும் வீட்டில் இருந்து வெளியே வராத நிலையில், பக்கத்து தோட்டத்தில் இருப்பவர் சந்தேகப்பட்டு சென்று பார்த்தபோது, அங்கு இருவரும்  படுகாயங்களுடன் சடலமாக  கிடந்தனர். உடனடியாக அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.  போலீசார், தடயவியல் நிபுணர்கள் அங்கு வந்து  விசாரணையை தொடங்கினர். மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது.

கொலை செய்யப்பட்ட தம்பதி வீட்டில் நகை, பணம் இருந்ததா,  அதற்காக கொலை நடந்ததா, அல்லது முன்விரோதமா என போலீசார் துப்புதுலக்கினர். அப்போது பக்கத்து வீட்டுக்காரர் ரமேஷ் என்பவருக்கும்,  பழனிசாமிக்கும் முன்விரோதம் இருந்து வந்தது தெரியவந்தது.  எனவே   ரமேஷ் மீது போலீசாருக்கு  சந்தேகம் ஏற்பட்டது.   ரமேசை   தனியாக  அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் வயதான தம்பதியை,  தான் கொலை செய்ததை ஒப்புக்கொண்டதாக தெரிகிறது..  பழனிசாமி வீட்டில் வளர்க்கும் கோழிகள் வேலியை தாண்டி தனது வீட்டுக்கு தினமும் வந்ததால்,  அடிக்கடை சண்டை ஏற்பட்டதாகவும் அதன் தொடர்ச்சியாக  நேற்றும் சண்டை ஏற்பட்டதால் கொலை செய்ததாக  பக்கத்து வீட்டுக்கார்  கூறினாராம்.  அதன் பேரில் அவரை போலீசார்   தொடர்ந்து விசாரிக்கிறார்கள். இந்த கொலையில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்றும் போலீசார் விசாரிக்கிறார்கள்.

error: Content is protected !!