திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பருவாய் பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி. பீரோ தயாரிக்கும் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.இவரது மனைவி தங்கமணி. இவர்களது மகள் வித்யா(22) , கோவை அரசு கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வந்தார்.
கடந்த மார்ச் 30-ந்தேதி வித்யாவின் பெற்றோர் கோவிலுக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. வீட்டில் வித்யா மட்டும் தனியாக இருந்தார். மாலையில் பெற்றோர் வீடு திரும்பிய போது வித்யா மீது வீட்டில் இருந்த பீரோ சரிந்து கிடந்தது. இதனால் வித்யா தரையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்திருக்கிறார். இதையடுத்து உறவினர்களுக்கு தகவல் கொடுத்து அவர்களுடன் சேர்ந்து, போலீசுக்கு தெரியாமல், வீட்டு அருகே உள்ள மயானத்தில் வித்யாவின் உடலை புதைத்து விட்டனர்.
இதற்கிடையே வித்யா தன்னுடன் கல்லூரியில் படித்த திருப்பூரைச் சேர்ந்த வெண்மணி என்ற இளைஞரை 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் வித்யாவை பெண் கேட்டு வெண்மணி குடும்பத்தார் வந்ததாகவும் சொல்லப்படுகிறது, ஆனால் இவர்களின் காதலை வித்யாவின் பெற்றோர் ஏற்றுக் கொள்ளவில்லை எனவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் வெண்மணி, வித்யாவின் செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது சுவிட்ச் -ஆப் ஆகி இருந்தாம். இதைத்தொடர்ந்து காதலியை பார்க்க அவர் வந்துள்ளார். அப்போதுதான் காதலி இறந்த தகவல் அவருக்கு தெரியவந்தது. இதையடுத்து காதலியின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக வெண்மணி காமநாயக்கன்பாளையம் போலீசில் புகார் கொடுத்தார்.
வேறு சமூகத்தை சேர்ந்தவரை காதலித்ததால் வித்யா ஆணவக்கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து காமநாயக்கன்பாளையம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இறந்த வித்யாவின் வீட்டில் தடயவியல் நிபுணர்களுடன் சென்று போலீசார் சோதனையும் நடத்தினார்கள். மேலும் கல்லூரி மாணவி வித்யா மீது சாய்ந்ததாக கூறப்படும் பீரோவில் கை ரேகைகள் பதிவாகி உள்ளதா என ஆய்வு செய்தார்கள்.
இதற்கிடையே கிராம வி.ஏ.ஓ. பூங்கொடி காமநாயக்கன்பாளையம் போலீசில், வித்யா மர்மமாக இறந்ததோடு, யாருக்கும் தகவல் தெரிவிக்காமல் உடலை புதைத்து விட்டதாக புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து வித்யாவின் உடல் புதைக்கப்பட்ட இடத்திற்கு நேற்று மாலை பல்லடம் தாசில்தார் சபரிகிரி, டிஎஸ்பி சுரேஷ், இ்ன்ஸ்பெக்டர் ராஜவேல் மற்றும் போலீசார், திருப்பூர் அரசு மருத்துவமனை டாக்டர் குழுவினருடன் சென்று வித்யாவின் உடலை தோண்டி எடுத்து அங்கேயே பிரேத பரிசோதனை செய்தனர்.
பிரேத பரிசோதனையில் வித்யாவின் தலையில் பலத்த காயம் இருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து வித்யாவின் தந்தை தண்டபாணி (53), அண்ணன் சரவணகுமார் (வயது 24), காதலன் வெண்மணி மற்றும் வித்யாவின் உடலை புதைத்த உறவினர்கள் ஆகியோரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர்.அதில் வித்யாவை அவரது அண்ணன் சரவணகுமார், இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்தது உறுதியானது. மாற்று சமுதாய இளைஞரை காதலித்ததால், தனது தங்கை வித்யாவை தான் இரும்பு கம்பியால் தாக்கி கொன்றதாக போலீசாரிடம் சரவணண் வாக்குமூலம் அளித்தார். கடந்த 3 வருடமாக தங்கையை கண்டித்தும் அவர் கேட்காததால் கொலை செய்ததாக அண்ணன் கூறி உள்ளார். எனவே அவரை போலீசார் கைது செய்தனர்.