திருப்பூரைச் சேர்ந்வர் சந்திரசேகர். இவரது மனைவி சித்ரா. இத் தம்பதியரின் 60-வது திருமண நாளை(மணிவிழா) கொண்டாடுவதற்காக நேற்று மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் சென்று விட்டு திருப்பூர் நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தனர். இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை வெள்ளகோவிலை கடந்து திருப்பூர் நோக்கி கார் வந்து கொண்டிருந்தபோது ஓலப்பாளையம் என்னும் இடத்தில் திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து சந்திரசேகர் ஓட்டிச் சென்ற கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் காரில் பயணித்த சந்திரசேகர் ,சித்ரா மற்றும் இளவரசர், அரிவித்ரா மூன்று மாத குழந்தை சாக்சி ஆகிய 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் காரில் பயணித்த மற்றொரு நபர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இந்த விபத்து காரணமாக கோவை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
உடனடியாக வெள்ளகோவில் காவல்துறையினர் மற்றும் அந்த வழியாக திருச்சி நோக்கி வந்த பஸ் பயணிகள் கடப்பாரையால் பேருந்தை உடைத்து பேருந்தை அப்புறப்படுத்தி அதற்கு அடியில் சிக்கி கிடந்த சடலங்களை மீட்டு போக்குவரத்தை சீர் செய்தனர் . சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியான சம்பவத்தைத் தொடர்ந்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.