Skip to content

கடவுள் சரியாக இருக்கிறார், சில மனிதர்கள் தான் சரியாக இல்லை – திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி கருத்து

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக மதுரையைச் சேர்ந்த கண்ணன், முத்துகுமார் உட்பட பலர் உயர்நீதிமன்ற மதுரை கிளை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தனர்.

அதில், திருப்பரங்குன்றம் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இது பாண்டிய மன்னன் காலத்தில் கட்டப்பட்டது. இந்த கோயிலில் எவ்விதமான உயிர் பலியிடுதலும் செய்தல் கூடாது. சிகந்தர் பாதுஷா தர்காவில் ஆடு, கோழி பலியிட தடை விதிக்க வேண்டும். திருப்பரங்குன்றம் மலையை சிகந்தர் மலை என அழைக்க தடை விதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளுடன் பல்வேறு மனுக்கல்ள் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணை நிலுவையில் இருந்தது.

இந்த வழக்கின் விசாரணை இன்று நீதிபதிகள் நிஷா பானு, ஸ்ரீமதி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. கோயில்களில் கால்நடைகளை பலியிடும் வழக்கம் இருக்கிறது. திருப்பரங்குன்றம் மலையை சுற்றியுள்ள அருள்மிகு 18ம் படி கருப்பசாமி திருக்கோயில், அருள்மிகு பாண்டி முனீஸ்வரர் திருக்கோயில் மற்றும் பிற கோயில்களில் கால்நடைகளை பலியிடும் வழக்கம் உள்ளது. இது ஒற்றுமையே பலம் என்பதால் தமிழ்நாடு அரசு அனைத்து மதத்தினருக்கும் இடையே ஒற்றுமையை பேண விரும்புகிறது என மதுரை மாநகர காவல்துறை ஆணையர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதேபோல திருப்பரங்குன்றம் மலை ஒன்றிய அரசின் தொல்லியல் துறைக்கு சொந்தமானது என்பதால், அங்கு எதைச் செய்தாலும் தொல்லியல் துறையிடம் அனுமதி பெற வேண்டும் என தொல்லியல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்த நீதிபதிகள், கடவுள்கள் சரியாகத்தான் இருக்கிறார்கள். சில மனிதர்கள்தான் சரியாக இல்லை. திருப்பரங்குன்றம் மலை அனைவருக்கும் சொந்தமானது. தொல்லியல் துறைக்கு சொந்தம் என்ற வாதத்தை ஏற்க முடியாது என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். மேலும், ஒன்றிய அரசின் தொல்லியல் துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். அதன் அடிப்படையில் நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பிக்கும் என கூறி வழக்கை ஏப்ரல் 7ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

error: Content is protected !!