திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ஏ – கஸ்பா பகுதியை சேர்ந்தவர் முருகன் மாட்டு வியாபாரி. இவரும் வாணியம்பாடியை சேர்ந்த பாபு என்பவரும் நண்பர்களான நிலையில், தற்போது பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக தகராறு இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று, ஆம்பூர் அடுத்த வீராங்குப்பம் கிராமத்தில் எருதுவிடும் விழா நடைபெற்ற போது, எருது விடும் விழாவை காண முருகனும், பாபுவும் வந்துள்ளனர், அப்பொழுது , இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது.
இந்த தகராறில் முருகனுக்கு ஆதரவாக சென்ற ஆம்பூர் ராமசந்திராபுரம் பகுதியை சேர்ந்த குபேந்திரன் மற்றும் சதீஸ் ஆகிய இருவரையும் பாபு , சரமாரியாக கத்தியால் தாக்கியுள்ளார், நவயோகன் என்பவரையும் பாபு தாக்கியுள்ளார், இதில் கத்திக்குத்து பட்ட குபேந்திரன் மற்றும் சதீஸை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், மேல்சிகிச்சைக்காக குபேந்திரன் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
எருதுவிடும் விழாவில் பாபு, கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டும் வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இச்சம்பவம் குறித்து உமராபாத் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து, குபேந்திரன் மற்றும் சதீஸ், நவயோகனை தாக்கிய வாணியம்பாடியை சேர்ந்த பாபு மற்றும் சங்கர் ஆகிய இருவரையும் உமராபாத் காவல்துறையினர் கைது செய்து அவர்கள் மீது வழக்குபதிவு செய்து, விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.