காரைக்காலை அடுத்த திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வர சுவாமி தேவஸ்தானத்தில், ஸ்ரீ சனீஸ்வர பகவான் தனி சன்னதி கொண்டுள்ளார். எனவேஇங்கு நடைபெறும் சனிப்பெயர்ச்சி விழா சிறப்பு வாய்ந்தது. புதுவை, தமிழ்நாடு மாநில மக்கள் மட்டுமல்லாமல், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் சனிப்பெயர்ச்சி விழாவில் கலந்து கொண்டு சனிபகவானை தரிசித்து செல்வார்கள்.
அந்த வகையில் இன்று மாலை 5. 20 மணிக்கு சனிப்பெயர்ச்சி விழா நடக்கிறது. சனிபகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பிரவேசிக்கிறார். இந்த நேரத்தில் சனிபகவானுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெறும். இதில் கலந்து கொள்ள இன்று காலை முதலே பக்தர்கள் திருநள்ளாறு வந்த வண்ணம் உள்ளனர். இதனால் காரைக்கால், திருநள்ளாறு பகுதிகளில் உள்ள அனைத்து விடுதிகளிலும் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.
பக்தர்களின் வசதிக்காக இன்று காலை 6 மணி முதல் திருநள்ளாறு கோயிலுக்கு அரசு இலவச பஸ் வசதி செய்திருந்தது. இதற்காக 26 பஸ்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. இது பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்களை கோயிலுக்கு அழைத்து வந்து, பின்னர் திரும்பவும் அழைத்து செல்லுகிறது. இது தவிர மாற்றுத்திறனாளிகள் வசதியை கருத்தில் கொண்டு எலக்ட்ாிக் ஆட்டோக்கள் இயக்கப்பட்டது. திருநள்ளாறு ஆன்மீக பூங்கா மற்றும் திருநள்ளாறு சுரக்குடி முனை ஆகிய இரண்டு தற்காலிக பஸ் நிறுத்தங்களிலிருந்து இந்த ஆட்டோக்கள் இயக்கப்பட்டன.
காலையிலேயே பக்தர்கள் நளன் குளத்தில் நீராடி சாமிதரிசனம் செய்தனர். சனிபெயர்ச்சி விழாவையொட்டி காரைக்கால் மாவட்டத்திற்கு இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
மாலையில் பல்லாயிரகணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் பலத்த பாதுகாப்பு, குடிநீர், கழிப்பிட வசதிகளை அரசு மற்றும் கோவில் நிர்வாகம் செய்துள்ளது. காரைக்கால் மாவட்ட கலெக்டர் குலோத்துங்கள் மற்றும் போலீஸ் அதிகாரி திருநள்ளாறில் முகாமிட்டு விழா ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். திருநள்ளாறின் முக்கிய பகுதிகளிலும் கோயில் அமைந்துள்ள பகுதியிலும் கண்காணிப்பு காமிராக்கள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் உஷார்படுத்தப்பட்டுள்ளது.