தமிழ்நாடு முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு அரசு பள்ளிகளில் ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை அறிவித்து, தொடங்கி வைத்தார். இதில் முதல் கட்டமாக மாநகராட்சி, நகராட்சி பகுதியில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கும் காலை உணவுத்திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என்று முதல்வர் அறிவித்தார். இதையடுத்து வரும் 25ம் தேதி இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட உள்ளது.
இதற்கான தொடக்க விழா மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி படித்த நாகை மாவட்டம் திருக்குவளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது.
வரும் 25ம் தேதி காலை 8.30 மணிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காலை உணவை மாணவ, மாணவிகளுக்கு வழங்கி தொடங்கி வைக்கிறார். இதற்காக கருணாநிதி படித்த பள்ளியை பளபளப்பாக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. முக்கியமாக பள்ளியில் வர்ணம் பூசும் பணிகள், கழிப்பறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உள்ளிட்டவைகள் அமைப்பது, நிகழ்ச்சி மேடை பணிகள் நடந்து வருகிறது.
முதல்வர் வருகைக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே இருப்பதால் இரவு பகல் பாராமல் முழு வீச்சில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக பள்ளி வளாகத்தில் ரூபாய் 7 லட்சம் மதிப்பீட்டில் ஒன்றிய பொது நிதி ஒன்றிய பெருந்தலைவர் செல்வராணி ஞானசேகரன் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் சுதா அருணகிரி பரிந்துரையின் பேரில் கலையரங்கம் கட்டுமான பணி மேற்கொள்ளப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் கருணாநிதி வீட்டின் முன்பு விழா மேடை அமைக்கும் பணிகளும் நடந்து வருகிறது. மேலும் இங்கு நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளை திமுக மாவட்ட செயலாளரும் தமிழக மீன் வளர்ச்சி கழக தலைவருமான என். கௌதமன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.உடன் திமுக பொதுக்குழு உறுப்பினரும் ஊராட்சி மன்ற தலைவருமான இல. பழனியப்பன், ஒன்றிய செயலாளர்கள் சோ.பா மலர்வண்ணன்(கீழையூர் மேற்கு),மகா.குமார்(தலைஞாயிறு), வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெற்றிச்செல்வன்,பாத்திமா ஆரோக்கிய மேரி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.