அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருசெந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வருடந்தோறும் பல்வேறு விழாக்கள் நடந்தாலும் ஐப்பசி மாதத்தில் நடைபெறும் சூரசம்ஹாரம் சிறப்பு வாய்ந்தது. அந்த சூரசம்ஹாரம் இன்று மாலை நடக்கிறது. இதையொட்டி இன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெறுகிறது.
மாலை 4.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு எழுந்தருள்கிறார். கடற்கரையில் சுவாமி, சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடக்கிறது. தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் கிரிப்பிரகாரத்தில் உலா வந்து கோவிலை சேர்ந்த பின் அங்கு சாயாபிஷேகம் நடக்கின்றது.
இந்நிலையில் சூரசம்ஹாரத்தை காண உள்ளூர், வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்த வண்ணம் உள்ளனர். பக்தர்களின் பாதுகாப்பு கருதி, கடற்கரையில் கம்பு மற்றும் கம்பிகளால் தடுப்பு வேலி அமைக்கப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
7-ம் திருநாளான நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடக்கிறது. 5.30 மணி அளவில் தெய்வானை அம்பாள் தபசு காட்சிக்கு புறப்படுகிறார். காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, 6 மணிக்கு அம்பாளுக்கு சுவாமி காட்சி கொடுக்கிறார். பின்னர் மாலைமாற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு சுவாமிக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.