திரிபுரா மாநிலத்தில் நேற்று மாலை 4 மணியோடு சட்டமன்ற தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தது. நாளை அங்கு வாக்குபதிவு நடைபெறுகின்றது. திரிபுராவில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் பாஜ கூட்டணி, காங்கிரஸ், இடதுசாரி கூட்டணி கட்சிகள் அங்கு கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுகிறது.
பாஜ சார்பில் பிரதமர் மோடி மற்றும் ஒன்றிய அமைச்சர்கள் பலர் நேரில் சென்று வாக்குசேகரித்தனர். காங்கிரஸ் பிரசாரத்தில் இந்த முறை ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி பங்கேற்கவில்லை.
மாநிலத்தில் மொத்தம் 28.13லட்சம் வாக்காளர்கள் இருக்கின்றனர். தேர்தலுக்காக 3,328 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 1100 மையங்கள் பதற்றமானவையாக அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் 28 வாக்குபதிவு மையங்கள் மிகவும் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. 60 தொகுதிகளிலும் மொத்தம் 259 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் 20 பேர் பெண் வேட்பாளர்கள். அதிகபட்சமாக பாஜ சார்பாக 12 பெண் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். ஆளும் பாஜ 55 தொகுதிகளிலும், அதன் கூட்டணியான ஐபிஎப்டி 6 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றது.
ஒரு தொகுதியில் இருகட்சியை சேர்ந்த வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 47 இடங்களிலும் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி 13 ெதாகுதிகளிலும் வேட்பாளர்களை களம் இறக்கியுள்ளனர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 28 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. 58 சுயேட்சை வேட்பாளர்களும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றனர். நாளை வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் மார்ச் 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது .