Skip to content

தஞ்சை டைடல் பார்க் விரைவில் முதல்வர் திறக்கிறார்… அமைச்சர் டிஆர்பி ராஜா தகவல்

தஞ்சாவூர் மேலவஸ்தா சாவடியில் டைடல் பூங்கா கட்டுமானப் பணி நிறைவடைந்துள்ளது. இதை ஆய்வு செய்ய அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் வருகை புரிந்தனர். பின்னர்  அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:

தஞ்சாவூரில் விவசாயிகளின் படித்த பிள்ளைகளுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும். தொழில்நுட்பப் புரட்சியை உருவாக்க வேண்டும் என்பதற்காக இந்த டைடல் பூங்காவைத் முதல்வர் ஸ்டாலின் அமைத்துள்ளார். இதன் கட்டுமானப் பணி முழுமையாக முடிவடைந்துள்ளது. இதனால் இப்பூங்காவை சில வாரங்களில் தமிழக முதல்வர் திறந்து வைக்கவுள்ளார்.

இந்தப் பூங்காவில் இதுவரை இரண்டு நிறுவனங்கள் தொடங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்னும் 7 நிறுவனங்கள் தொடங்குவதற்கு காத்திருக்கின்றன. எனவே திறப்பு விழாவுக்கு முன்பே நிறுவனங்கள் முழுமையாக வந்துவிடும். மேலும் நிறுவனங்கள் தொடங்க முன்வந்தால் அருகிலுள்ள இடத்தில் கட்டடம் கட்டப்படும். இதன் மூலம் ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது.

இதேபோல, விழுப்புரத்தில் டைடல் பூங்கா திறக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் பணிகள் நடந்து வருகிறது. உதகையில் மலைவாழ் மக்களுக்காக டைடல் பூங்கா தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

தஞ்சாவூரில் சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பது தொடர்பாக கடந்த சட்டமன்ற தொடரில் அறிவிக்கப்பட்டது. இதில், பல புதிய நிறுவனங்கள் தொடங்கப்பட்டு, பல ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்காக செங்கிப்பட்டியிலுள்ள காசநோய் மருத்துவமனையை அகற்றப் போவதாக சிலர் வதந்தியை பரப்பி வருகின்றனர். அது முற்றிலும் உண்மைக்கு புறம்பான தகவல். உள்நோக்கத்துடன் இதை பரப்புகின்றனர். அதை அகற்றும் எண்ணம் இல்லை. காசநோய் மருத்துவமனை உள்ள இடத்துக்கும், சிப்காட் தொழிற்பேட்டைக்கும் தொடர்பில்லை. மேலும், காசநோய் மருத்துவமனையைத் தரம் உயர்த்தி, சிப்காட்டுக்கு பயனுள்ளதாக செய்யப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறுகையில், டெல்டா பகுதி விவசாயம் நிறைந்ததாகும். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஐ.டி.பார்க் கொண்டுவரப்பட்டு வருகிறது. டெல்டாவில் விவசாயம் சார்ந்த தொழிற்சாலை அமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும் . அரசு பள்ளிகளில் நடப்பாண்டு இதுவரை 3.57 லட்சம் மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர். கடந்த ஆண்டை விட இது 5 சதவீதம் அதிகம். இதற்காக தேவையான வகுப்பறைக் கட்டடங்கள் உட்பட மேம்பாட்டு பணிகள் செய்யப்படுகின்றன என்றார்.

ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப், எம்.பி., முரசொலி மற்றும் பலர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!