தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் சாலை, சங்கரப்பேரி விலக்கு பகுதியிலுள்ள திடலில் புத்தகக் காட்சி, நாளை தொடங்கி (ஏப்ரல் 21ம் தேதி முதல் மே 1ம் தேதி வரை) 11 நாட்கள் நடைபெறுகிறது, மேலும் வரும் ஏப்ரல் 28ம் தேதி முதல் மே 1ம் தேதி வரை, நெய்தல் கலைத் திருவிழாவும் இந்த புத்தகக் காட்சியுடன் இணைந்து 4 நாட்கள் நடைபெறுகிறது. இன்று புத்தகக் காட்சி நடைபெறும் மைதானத்தை பார்வையிட்ட திமுக துணைப் பொதுச்செயலாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அவர்கள், பிரம்மாண்ட பலுானை பறக்க விட்டு, விழாவை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி, மற்றும் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.
நெய்தல் கலைத்திருவிழாவில் தூத்துக்குடி மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 300க்கும்- மேற்பட்ட நாட்டுப்புறக்
கலைஞர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்த உள்ளனர்.
கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், பறையாட்டம், குச்சியாட்டம், துடும்பாட்டம், ஜிம்பளா மேளம், பொய்க்கால் குதிரை, கிராமிய நிகழ்ச்சி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
*உணவுத் திருவிழா*
நெய்தல் திருவிழாவின் ஒரு பகுதியாக தூத்துக்குடியின் சிறப்பு உணவுகளுடன் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியைச் சேர்ந்த பாரம்பரிய உணவுகளும் காட்சிப்படுத்தப்பட உள்ளது.
*புத்தகக் காட்சி*
புத்தகக் காட்சியில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள் விற்பனைக்காக வைக்கப்பட உள்ளன. புத்தகத் திருவிழாவின் ஒரு பகுதியாக தினமும் பல்வேறு சிறப்பு விருந்தினர்கள் பங்குபெறும் சொற்பொழிவுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
*புகைப்பட கண்காட்சி*
தூத்துக்குடி மாவட்டத்தின் சிறந்த புகைப்படங்களின் கண்காட்சியும் நடைபெறவுள்ளது. இப்புகைப்படக் கண்காட்சிக்கு 18 வயதிற்குட்பட்ட கலைஞர்களின் படைப்புகள் ஒரு பிரிவாகவும், 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஒரு பிரிவாகவும் நடைபெற உள்ளது. இதில் உங்களின் படைப்புகளும் இடம்பெற தங்களின் சிறந்த புகைப்படங்களை www.thoothukudi.nic.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம். இப்போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்ந்தெடுக்கப்படும் மிகச்சிறந்த புகைப்படங்களுக்கு முதல் பரிசு ரூ.1 இலட்சம், இரண்டாம் பரிசு ரூ.50,000 மற்றும் ஆறுதல் பரிசாக 10 புகைப்படங்களுக்கு தலா ரூ.5,000 வீதமும் வழங்கப்படவுள்ளது.