தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகே உள்ள புங்கவர் நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் போலி சாமியார் ஆன இவர் அருள் வாக்கு கூறுகிறேன் என்ற பெயரில் பல்வேறு நபர்களிடம் ஆசிவாரத்தை கூறி மோசடியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார். மேலும் தன்னிடம் வரும் நபர்களிடம் பூஜை செய்தால் தொழில் வளம் பெருகும் பணம் இரட்டிப்பு செய்து தருகிறேன் எனக்கூறி பல்வேறு நபர்களை ஏமாற்றியுள்ளார். மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இவரது ஆசை வார்த்தையில் ஏமாந்து பல லட்ச ரூபாய் பணத்தை இவரிடம் கொடுத்து பலர் தங்கள் வாழ்க்கையை இழந்துள்ளனர். இதில் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி ஏரல் பகுதியைச் சேர்ந்த லிங்கராஜ் மற்றும் அவரது நண்பர் ஆனந்தகுமார் ஆகியோர் போலி சாமியார் பாலசுப்பிரமணியத்திடம் சுமார் 77 லட்ச ரூபாய் பணத்தை கொடுத்து ஏமாந்துள்ளனர். இந்த பணத்தை திருப்பி கேட்டால் பாலசுப்ரமணியம் மற்றும் அவரது மகன் அய்யாதுரை ஆகியோர் போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு குடும்பத்துடன் தலைமறைவாகி உள்ளனர்.
இதேபோன்று பாலசுப்பிரமணியன் மற்றும் அவரது குடும்பத்தினர் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன், மாரிமுத்து, இருளப்பன் ஆகியோரிடம் சுமார் ரூ44 லட்சமும் எட்டயபுரத்தைச் சேர்ந்த மாரிக்கண்ணு என்பவரிடம் 5 லட்சமும் சாந்தி என்பவரிடம் 17 லட்சம் திண்டுக்கல்லை சேர்ந்த பாலமுருகன், கமலக்கண்ணனிடம், திருமலைசாமி ஆகியோரிடம் சுமார் 90 லட்சம் என சுமார் 20க்கும் மேற்பட்டோரிடம் 2 கோடியே 30 லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அல்பர்ட் ஜானிடம் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து தலைமறைவாக இருந்த போலி சாமியார் பாலசுப்பிரமணியன் மற்றும் அவரது மகன் ஐயாதுரை ஆகிய 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த மோசடி தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.