Skip to content
Home » துறையூர்….. 2 பேர் கொலையில் பகீர் தகவல்கள்…. குற்றவாளிகள் கைது…

துறையூர்….. 2 பேர் கொலையில் பகீர் தகவல்கள்…. குற்றவாளிகள் கைது…

துறையூர் அருகே வெவ்வேறு இடங்களிலுள்ள பாலங்களின் அடியில் தலை, முகம் உள்ளிட்ட இடங்களில் காயங்களுடன் ஒரத்த நாட்டைச் சேர்ந்த 2 பேர் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். இது தொடர்பாக 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

திருச்சி மாவட்டம் துறையூர் அருகேயுள்ள கொத்தம்பட்டியில் குண்டாற்றுப் பாலத்தின் கீழ் நேற்று ஒருவர் முகம், தலையில் காயங்களுடன் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். தகவலறிந்த துறையூர் போலீஸார் அங்கு சென்று பார்வையிட்டனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.

இதேபோல, கொத்தம்பட்டியிலிருந்து 5 கி.மீ தொலைவிலுள்ள பொன்னுசங்கம்பட்டி கிராமத்தில் கண்ணனூர் பாளையம் ஏரிக்குச்செல்லும் உபரிநீர் வாய்க்காலின் பாலத்துக்கு அடியில் மேலும் ஒருவர் கொலை செய்யப்பட்டுகிடப்பது நேற்று மாலை தெரியவந்தது. தகவலறிந்த ஜம்புநாதபுரம் போலீஸார் அங்கு சென்று பார்த்தபோது இந்த நபருக்கும் முகம், தலையில் படுகாயங்கள் இருந்தன.

எனவே, இரு கொலைச்சம்பவங்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்னர். இதையடுத்து திருச்சி சரக டிஐஜி சரவணசுந்தர், எஸ்.பி. சுஜித்குமார், முசிறி டிஎஸ்பி யாஸ்மின் உள்ளிட்டோர் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில், கொத்தம்பட்டி பாலத்தின் கீழ் இறந்து கிடந்தவர் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகேயுள்ள நெடுவாக்கோட்டையைச் சேர்ந்த இளங்கோவன் மகன் ஸ்டாலின் (40), பொன்னுசங்கம்பட்டியில் இறந்து கிடந்தவர் அதே ஊரைச் சேர்ந்த காத்தலிங்கம் மகன் பிரபு (40)  என்பது தெரியவந்தது.

இது குறித்து டிஐஜி சரவண சுந்தரிடம் கேட்டபோது, “இருவரையும் வேறு எங்காவது கொலை செய்து, இங்கு கொண்டு வந்து பாலத்தின் மேல் பகுதியிலிருந்து உருட்டி விட்டுள்ளது போல தெரிகிறது. 2 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 2 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்றார்.

இதற்கிடையே நேற்று காலை ஒரத்தநாடு ஆற்றில் அதிக அளவு ரத்தம் சிந்தி கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அங்கு சென்று  விசாரணை நடத்தினர்.  இதற்கிடையே துறையூர் போலீசார் 2 பேர் கொலை செய்யப்பட்டு கிடக்கும் தகவலை ஒரத்தநாட்டுக்கு தெரிவித்தனர்.  கொலை செய்யப்பட்டு கிடந்தவர்களின் புகைப்படங்களையும் அனுப்பினர்.

அதன் பேரில் ஒரத்தநாடு போலீசார் துப்பு துலக்கினர். இதில்  கொலை செய்யப்பட்ட பிரபு  வெளிநாட்டுக்கு ஆள் அனுப்பும் வேலை செய்து வந்தார்.  அவர் டைவர்ஸ் ஆனவர்.  ஸ்டாலின் அவரது நண்பர். இவர் வாடகை கார் ஓட்டும் தொழில் செய்து வந்தார்.

இந்த கொலை தொடர்பாக அதே ஊரைச்சேர்ந்த  சிவசூரியன், ஹரிகரன் ஆகிய 2 பேரை  போலீசார் கைது செய்தனர். இவர்கள்  வாடகைக்கு கார் வேண்டும் என  ஸ்டாலினிடம்  சம்பவத்தன்று நள்ளிரவு போனில் பேசி அழைத்து சென்று உள்ளனர்.  அந்த தடயத்தின் மூலம்  போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தபோது  கொலையை அவர்கள் ஒத்துக்கொண்டனர். உடனடியாக அவர்களை துறையூர் போலீசில் ஒப்படைத்தனர்.  பிரபு அதே ஊரில் ஒரு   பெண்ணை காதலித்து  வந்தாராம். இதை அவரது உறவினர்கள் கண்டித்து உள்ளனர்.  இதனால் ஏற்பட்ட மோதலில் இருவரையும் ஏமாற்றி அழைத்து சென்று  கொலை செய்து உள்ளனர்.  கொலை செய்வதற்கு முன் அனைவரும் மது அருந்தி உள்ளனர். அப்போது ஏற்பட்ட மோதலில்   முதலில் பிரபு கொல்லப்பட்டார். பின்னர் ஸ்டாலினையும் அடித்து கொன்று இரவோடு இரவாக  2 சடலங்களையும் காரில் கொண்டு வந்து துறையூரில் வீசிவிட்டு போய் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *