அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் போட்டியிட்டார்.
அவரது பூர்வீக கிராமம், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகேயுள்ள துளசேந்திரபுரம். இங்குள்ள கமலா ஹாரிசின் உறவினர்கள் சிலர், கமலா ஹாரிஸ் வெற்றி பெற வேண்டி, அங்குள்ள அவரது முன்னோர்களின் குல தெய்வமான தர்ம சாஸ்தா கோயிலில் நேற்று முன்தினம் சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர்.
இதில், அமெரிக்காவை சேர்ந்த கமலா ஹாரிஸ் ஆதரவாளர்களான 2 பெண்கள், லண்டனைச் சேர்ந்த ஒரு பெண் மற்றும் கிராம மக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிலையில், நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் கமலா ஹாரிஸ் தோல்வியடைந்ததால், துளசேந்திரபுரம் கிராம மக்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். அதேபோல, அமெரிக்காவில் இருந்து வந்திருந்த கமலாவின் ஆதரவாளர்களும் சோகத்தில் மூழ்கி இருந்தனர்.