மயிலாடுதுறை மாவட்டத்துக்கு துலா உற்சவ கடைமுக தீர்த்தவாரியை முன்னிட்டு நவ.15 (வெள்ளிக்கிழமை) உள்ளுர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி உத்தரவிட்டுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் காவிரி ஆற்றை முன்னிலைப்படுத்தி நடைபெறும் முக்கிய உற்சவமாக ஐப்பசி மாதம் 30 நாள்களும் நடைபெறும் காவிரி துலா உற்சவம் உலக பிரசித்தி பெற்றதாகும். குறிப்பாக ஐப்பசி மாதம் கடைசி நாள் நடைபெறும் கடைமுகத் தீர்த்தவாரி உற்சவத்தில் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து ஒரே நேரத்தில் காவிரியில் புனித நீராடுவார்கள்.
உலக பிரசித்தி பெற்ற இந்த விழா நவ.15-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், இவ்விழாவில் பக்தர்கள் பங்கேற்பதற்கு வசதியாக கடைமுகத் தீர்த்தவாரி விழாவினை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்துக்கு நவ.15 (வெள்ளிக்கிழமை) உள்ளுர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி உத்தரவிட்டுள்ளார்.
விடுமுறை தினத்தில் சார்நிலை கருவூலங்கள் திறந்திருக்கும்.
மேலும் இந்த உள்ளுர் விடுமுறை நாளை ஈடுசெய்யும் வகையில் நவ.23 (சனிக்கிழமை) பணி நாளாக அறிவிக்கப்படுகிறது என அவர் தெரிவித்துள்ளார். துலா உற்சவத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டிருப்பது பொதுமக்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.