திருச்சி திருப்பராய்த்துறை காவிரி கரையில் அமைந்துள்ளது தாருகாவனேசுவர் கோயில். இறைவன் வந்திருக்கிறார் என்று தெரியாமல்அவருக்கு எதிராக மமதை கொண்டு நடத்திய யாகத்தின் மூலம் ஏவப்பட்ட பூதகணங்களை அடக்கப்பட்டதை கண்டு வந்திருப்பது இறைவன் தான்என்று அறிந்து அவரிடமே தஞ்சமடைந்த முனிவர்களுக்கு தாருகாவனேசுவராக காட்சியளித்ததாக இச்சிவன் கோயிலின் தலவரலாறு கூறுகிறது.
இக்கோயிலில் ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் முதல்நாள் துலாஸ்நான திருவிழா நடைபெறும். இதனையொட்டி இன்று காலை மூலஸ்தான சிவலிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகங்களும் ஆராதனைகளும் நடைபெற்றது.அதன் பின்னர் வெள்ளி ரிஷபவாகனத்தில் சோமஸ்கந்தர் ,அம்பாள், பசும்பொன் மயிலாம்பிகை சுவாமிகள் புறப்பாடு நடைபெற்றது. மேளங்கள் முழங்க ஆயிரக்கணக்கான பக்தர்களுடன் நடைபெற்ற இந்த ஊர்வலமானது அகண்ட காவிரியை வந்தடைந்தது.
அதன்பின்னர் திருக்கோவிலில் யாகபூஜையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் திருக்கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்களால் காவிரி ஆற்றில் ஊற்றப்பட்டு பின்னர் ஆற்றில் நின்று புனித நீராடி சென்றனர்.தொடர்ந்து அஸ்திர தேவருக்கு தீர்த்தவாரி வைபவம் நடைபெற்றது. அப்போது பல்லாயிரகணக்கான பக்தர்கள் காவிரியில் புனித நீராடினர். துலா(ஐப்பசி) மாதத்தில் காவிரியில் நீராடினால் பாவங்கள் தீரும் என்பதை ஐதீகம் எனவே இன்று பல்லாயிரகணக்கான மக்கள் திருப்பராய்த்துறை காவிரிக்கு அதிகாலமே வந்து காத்திருந்தனர். இதற்காக தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் வந்திருந்தனர். தீர்த்தவாரி நடந்தபோது பக்தர்கள் அனைவரும் காவிரியில் இறங்கி துலா ஸ்நானம் செய்தனர்.