Skip to content
Home » மயிலாடுதுறை துலா கட்ட காவிரியில் தீர்த்தவாரி…. ஏராளமான பக்தர்கள் புனித நீராடல்

மயிலாடுதுறை துலா கட்ட காவிரியில் தீர்த்தவாரி…. ஏராளமான பக்தர்கள் புனித நீராடல்

கங்கை, யமுனை, சரஸ்வதி உள்ளிட்ட புண்ணிய நதிகள், கோடிக்கணக்கான பக்தர்கள் தங்கள் பாவங்களைப் போக்கிக்கொள்ள புனித நீராடியதால் ஏற்பட்ட பாவச்சுமை நீங்க சிவபெருமானை பிரார்த்தித்ததாகவும், அவர்களிடம், மயிலாடுதுறையில் ஐப்பசி மாதம்  முழுவதும்  தங்கி துலாக்கட்ட காவிரியில் புனித நீராடி பாவச் சுமைகளை போக்கிக்கொள்ள இறைவன் அருளியதாகவும் ஐதீகம்.
காசிக்கு நிகராக போற்றப்படும் மயிலாடுதுறையில் ஐப்பசி மாதம்  முழுவதும்  இந்த துலா உற்சவம் நடைபெறும். இந்த ஆண்டு ஐப்பசி மாதத்தில் 29  நாட்கள்  மட்டும் உள்ளதால், 30-வது நாளன்று கடைமுகத் தீர்த்தவாரி செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் புரட்டாசி மாதம் 31ம் தேதியான  நேற்று  துலா உற்சவ மாதப்பிறப்பு தீர்த்தவாரி நடைபெற்றது.

கடைசியாக 2005-ம் ஆண்டு இதேபோன்று ஐப்பசி மாதத்தில் 29 தேதிகள் வந்த நிலையில், தற்போது 19 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வந்துள்ள இந்த மாதப்பிறப்பு தீர்த்தவாரியில் வழிபடுவது மிகுந்த சிறப்புக்குரியது என கூறப்படுகிறது.
அந்தவகையில், துலா உற்சவம் மாத பிறப்பு தீர்த்தவாரியுடன்  நேற்று  தொடங்கியது. இதனை முன்னிட்டு திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான அபயாம்பிகை சமேத மாயூரநாதர் சுவாமி, அறம்வளர்த்த நாயகி சமேத ஐயாறப்பர் சுவாமி பஞ்சமூர்த்திகளுடன் காவிரியின் தென்கரையில் எழுந்தருளினர். அங்கு திருவாவடுதுறை ஆதீனத் தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் அஸ்திரதேவருக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. தொடர்ந்து, அஸ்திர தேவருடன் ஏராளமான பக்தர்கள் காவிரியில் புனித நீராடினர்.

துலா உற்சவத்தில் முக்கிய விழாக்களாக நவ.1-ம் தேதி காலை அமாவாசை தீர்த்தவாரி, நவ.6-ம் தேதி திருக்கொடியேற்றம், நவ.10-ம் தேதி மயிலம்மன் பூஜை, நவ.12-ம் தேதி இரவு திருக்கல்யாணம், நவ.14-ம் தேதி திருத்தேர் உற்சவம் ஆகிய முக்கிய உற்சவங்கள் நடைபெற்று, நவ.15-ம் தேதி பிரசித்தி பெற்ற கடைமுகத் தீர்த்தவாரி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தருமபுரம் ஆதீனக் கோயில்களில் இருந்து பஞ்சமூர்த்திகள் துலா கட்ட  காவிரி  வடகரையில் எழுந்தருளி நடைபெற்ற தீர்த்தவாரியில் தருமபுரம் ஆதீனகர்த்தர்; மற்றும் திரளான பக்தர்கள் புனித நீராடினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!