Skip to content
Home » தண்ணீர் குறைந்த நிலையில் ……திருப்பராய்த்துறையில் நாளை துலா முழுக்கு…

தண்ணீர் குறைந்த நிலையில் ……திருப்பராய்த்துறையில் நாளை துலா முழுக்கு…

  • by Senthil

ஐப்பசி மாதத்தை துலா மாதம் என்பார்கள்.  இந்த மாதத்தில் இரவு நேரமும், பகல் நேரமும் சமமாக இருப்பதால், இதற்கு ‘துலா (தராசு) மாதம் என்று பெயர். ‘ஐப்பசி மாதம் முழுவதும் காவிரியில் நீராடுவது புண்ணியம் என்கிறார்கள். துலா மாதத்தில் சூரிய உதயத்திற்கு முன் காவிரியில் மும்மூர்த்திகளும், முப்பது முக்கோடி தேவர்களும், 68 ஆயிரம் ரிஷிகளும், முனிவர்களும், சித்தர்களும் நீராடுவதாக சாஸ்திரம் குறிப்பிடுகிறது.ஐப்பசி மாதம் முதல் நாளில் நீராடுவதை  துலா முதல் முழுக்கு என்றும் கடைசி நாளில்  நீராடுவதை கடைமுழுக்கும் என்று கூறுகிறார்கள்.

முதல் முழுக்கு திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறை காவிரியில் சிறப்பாக கொண்டாடப்படும்.  நாளை  அதிகாலை திருப்பராய்த்துறை   பசும்பொன்  மயிலாம்பிகை உடனுறை தாருகாவேனஸ்வரர்  வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வருவார். அவரைத்தொடர்ந்து  சோமாஸ்கந்தர்  தனி ரிஷப வாகனத்தில் வருவார். அவர்கள்   காவிரி கரையை அடைந்ததும்,  அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

பின்னர்  அஸ்திரதேவர் தீர்த்தவாரி நடைபெறும். அப்போது அங்கு திரண்டிருக்கும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் காவிரியில் நீராடுவார்கள். இதனை  துலா முதல் முழுக்கு என்கிறார்கள். இதற்காக தமிழ்நாடு முழுவதும் இருந்து பக்தர்கள்  இன்று நள்ளிரவே  திருப்பராய்த்துறை வந்து  காத்திருப்பார்கள்.

வழக்கமாக ஐப்பசி முதல் தேதியில் காவிரியில் அதிக அளவு தண்ணீர் செல்லும். இந்த ஆண்டு   மேட்டூர் அணையில் தண்ணீர் குறைவாக இருப்பதால்,  அணை மூடப்பட்டுள்ளது. எனவே குடிநீருக்காக மட்டும் சிறிதளவு தண்ணீர் திறக்கப்படுகிறது.  ஆனாலும்  திருப்பராய்த்துறை காவிரி ஆற்றில் தண்ணீர் ஓரளவு தேங்கி நிற்கிறது. அதில் பக்தர்கள் நீராடும் அளவுக்கு தண்ணீர் உள்ளது. இதே போன்று  மயிலாடுதுறை துலா கட்ட காவிரியிலும்  துலா முழுக்கு நடைபெறும். இங்கு ஐப்பசி கடைசி நாளில் நடைபெறும்  கடைமுழுக்கு சிறப்பு வாய்ந்தது.

 

 

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!