மேற்கு வங்காளத்தின் பாங்குரா நகரில் வசித்து வந்தவர் ஆகான்கிஷா (எ) சுவேதா. சமூக ஊடகம் வழியே 2007-ம் ஆண்டு உதியன் தாஸ் என்பவருடன் இவருக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதன்பின்பு, அது காதலாக மாறியது. வீட்டை விட்டு வெளியேறிய சுவேதா, போபால் நகரில் சாகேத் நகரில் வேலைக்காக சென்றவர், அப்படியே உதியனுடன் சேர்ந்து வாழ தொடங்கினார்.
இந்நிலையில், 2016-ம் ஆண்டு ஜூலைக்கு பின்னர், சுவேதாவுடன் அவரது குடும்பத்தினரால் தொடர்பு கொள்ள முடியவில்லை. போலீஸ் விசாரணையில், சுவேதாவை உதியன் கொலை செய்து பெட்டியில் போட்டு, வீட்டின் படுக்கை அறையில் புதைத்து வைத்து உள்ளதும், அதன்மேல் சிமெண்ட் பூசி அடையாளம் தெரியாதபடி செய்ததும் தெரிய வந்தது. இதன்பின், 2017- ஏப்ரலில் 600 பக்க குற்றப்பத்திரிகையை கோர்ட்டில் உதியனுக்கு எதிராக பாங்குரா போலீசார் தாக்கல் செய்தனர். 2020-ம் ஆண்டு உதியனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
எனினும், சந்தேகம் தீராமல் உதியனை போலீசார் தொடர்ந்து விசாரித்தனர். அதில், அவர் 2010-ம் ஆண்டு தாயார் இந்திராணி மற்றும் தந்தை வி.கே. தாஸ் ஆகியோரையும் கொலை செய்தது தெரிய வந்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இருவரின் உடலையும் சத்தீஷ்காரின் ராய்ப்பூர் மாவட்டம் டி.டி. நகரில் உள்ள தனது வீட்டு தோட்டத்தில் உதியன் புதைத்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.