தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகில் உள்ள ராகு பகவான் ஸ்தலமாக திருநாகேஸ்வரத்திற்கு வருகை புரிந்து தெலுங்கு திரையுலக பிரபல நடிகரும், எம்எல்ஏவுமான நந்தமூரி பாலகிருஷ்ணா சுவாமி தரிசனம் செய்தார்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து 6 கி.மீ தொலைவில் உள்ள திருநாகேஸ்வரம் ராகு ஸ்தலமாகும். ராகு பகவான், சிவபெருமானை பூஜித்த நாகநாதர் கோயில் இங்கு உள்ளது. இத்தல இறைவனுக்கு நாகநாதர், அர்த்தநாரீஸ்வரர் என இரு சன்னிதிகள் உண்டு. அதைப்போல அம்மனுக்கு பிறையணி வாநுதல் உமை சன்னிதி, கிரிகுஜாம்பிகை சன்னிதியும் உண்டு.
இத்தலத்தில் ராகுபகவான் உருவாக்கிய நாக தீர்த்தம், சூரிய தீர்த்தம், எம தீர்த்தம் உள்ளிட்ட 12 தீர்த்தங்கள்
இருக்கின்றன. ஆதி விநாயகர், கிரிகுஜாம்பாள், சரஸ்வதி, லட்சுமி, நவக்கிரகங்கள், அறுபத்து மூவர்கள் மற்றும் இதர தெய்வங்களுக்கும் சன்னிதி உண்டு.
இக்கோயிலின் 2வது பிரகாரம் தென் மேற்கு மூலையில் நாகவல்லி, நாகக்கன்னி ஆகிய தன் இரு தேவிமாருடன் மங்கள ராகுவாக தனி சன்னதியில் அமர்ந்துள்ளார். திருமண தடை, இல்லறத்தில் நிம்மதியின்மை, ஜாதகத்தில் பித்ரு தோஷம், களத்திர தோஷம், காலசர்ப்ப தோஷம், சர்ப்ப தோஷம், மாங்கல்ய தோஷம் நீங்க ராகு பகவானுக்கு பாலாபிஷேகம், அர்ச்சனை, ஹோமம் செய்து வழிபட்டுப் பேறு பெறலாம். இத்தகைய பெருமை வாய்ந்த ராகு ஸ்தலத்திற்கு தெலுங்கு திரையுலக பிரபல நடிகரும், எம்எல்ஏவுமான நந்தமூரி பாலகிருஷ்ணா வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தார்.