திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு, அண்ணாநகர் பகுதியில் 37ஆண்டுகளாக குடியிருந்து வரும் வீடுகள் மற்றும் மனைகளுக்கும் விரைந்து பட்டா வழங்க வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பத்திரப்பதிவை உடனடியாக தொடர வேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு அண்ணா நகரில் சேட்டிலைட் சிட்டி உள்ளது. இந்தப் பகுதியில் 37 ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்களுக்கு குறைந்தபட்ச விலை மதிப்பீட்டில் மனை வழங்கப்பட்டது. மேலும் இந்த பகுதியானது திருச்சியின் துணை நகரமாக அறிவிக்கப்பட்டது என கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு அப்பகுதி மக்களுக்கு பத்திரம் வழங்கப்பட்டது. மேலும் அவர்கள் தொடர்ந்து உங்களுக்கு
பட்டா வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் இது நாள் வரை அவர்களுக்கு பட்டா வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த மூன்று மாத காலமாக இந்த பகுதியில் வீட்டு மனை வாங்க விற்க பத்திரப்பதிவு முடக்கப்பட்டுள்ளதாக அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர். இதனால் தங்கள் வீட்டுமனையின் மீது கடன் பெறுவதற்கும், மனையைய விற்கவும் முடியாமல், வாங்கவும் முடியாமல் தவித்து வருவதாக தெரிவிக்கின்றனர்.
மாவட்ட நிர்வாகத்தின் இத்தகைய நடவடிக்கையால் அப்பகுதி மக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 100க்கும் மேற்பட்டவர்கள் அண்ணாநகர் சேட்டிலைட் சிட்டியில் வசிக்கக்கூடிய மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பத்திரப்பதிவு உடனடியாக தொடர வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி திருவெறும்பூர் – சூரியூர் சாலையில் உள்ள நவல்பட்டு காலனியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த நவல்பட்டு போலீசார் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். போராட்டக்காரர்களின் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டக்காரர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர்.
இதனால் திருவெறும்பூர் – சூரியூர் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.