திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள கக்கன் காலனி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் காஜி நிஷா (56) இவர் கீழ் வீட்டில் வசித்து வருகிறார். இவரது மகன் இத்தாலி நாட்டில் வேலை பார்த்து வருகிறார். மருமகள் நஜ்முநிஷா மாடி வீட்டில் வசித்து வருகிறார். பக்கத்திலேயே அவரது மகள் பாத்திமா கனி அவரது கணவர் தமீம் அன்சாரி ஆகியோர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் தாஜிநிஷா மகள் வீட்டிற்கு நேற்று இரவு போய் உள்ளார்.
இந்த நிலையில் இன்று காலையில் வந்து பார்த்தபொழுது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு வீட்டின் உள்ளே இருந்த பீரோ உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 15 பவுன் நகை மற்றும் ரூ50 ஆயிரம் பணம் கொள்ளை போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது சம்பந்தமாக உடனடியாக திருவெறும்பூர் போலீசருக்கு தகவல் கொடுத்தார். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவெறும்பூர் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டதோடு உடனடியாக கைரேகை பிரிவு போலீசார் மற்றும் மோப்பனாய் பிரிவுக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கைரேகை நிபுணர் அச்சுதன் தலைமையிலான குழுவினர் குற்றவாளிகளின் கைரேகைகளை பதிவு செய்தனர் மோப்ப நாய் நிலா சம்பவ இடத்தில் இருந்து அருகிலுள்ள ரயில்வே தண்டவாளம் வரை சிறிது தூரம் ஓடி நின்றது. மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் திருவெறும்பூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.