திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் மேப்பலம் பகுதியை சேர்ந்தவர் முருகையன். இவருடைய மகன் நரேஷ்குமார்( 24). பி.காம் பட்டதாரியான இவர், திருவாரூரில் உள்ள ஒரு ஓட்டலில் பணிபுரிந்து வருகிறார். இவரும், திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் கமலாபுரம் நத்தம் பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மகள் சுஷ்மிதாவும்(21) கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். காதலர்கள் இருவரும் நெருங்கி பழகியதால் சுஷ்மிதா கர்ப்பம் அடைந்தார். 7 மாத கர்ப்பிணியாக இருந்தபோது சுஷ்மிதா கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தனது வீட்டை விட்டு வெளியேறி நரேஷ்குமார் வீட்டுக்கு வந்தார். வருகிற 12-ந் தேதி இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டு இருந்தது. இதனால் சுஷ்மிதா கடந்த 1½ மாதமாக நரேஷ் குமாரின் வீட்டில் தங்கி இருந்தாா். தூக்கில் பிணம் திருமணத்துக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் நேற்று நரேஷ்குமாரின் பெற்றோர் திருமணத்துக்கு தேவையான துணிகள் மற்றும் தாலி உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்காக திருவாரூருக்கு சென்றனர். வீட்டில் சுஷ்மிதா தனியாக இருந்தார். சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு நரேஷ்குமார் வந்தார். அப்போது வீட்டின் பின்புறம் உள்ள கூரைக்கொட்டகையில் சுஷ்மிதா தூக்கில் பிணமாக தொங்கினார். தனது காதலி சுஷ்மிதா தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்த நரேஷ்குமார் கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் சம்பவ இடத்துக்கு திரண்டு வந்தனர். இதுகுறித்து கொரடாச்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சுஷ்மிதா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 3 நாட்களில் திருமணம் நடக்க இருந்த நிலையில் 8 மாத கர்ப்பிணி பெண் மணமகன் வீட்டில் தூக்கில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் கொரடாச்சேரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
