கார்த்திகை தீபத்தை முன்னிட்டு திருவண்ணாமலையில் உள்ள விடுதிகளில் கட்டணம் தாறுமாறாக எகிறியுள்ளதாக பக்தர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அரசு தலையிட்டு அதனை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த நிலையில் இந்த ஆண்டு கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
நவம்பர் 17-ம் தேதி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவின் கொடியேற்றம் நடைபெறும் என்றும், அதனைத் தொடர்ந்து பத்து நாட்கள் தீபத் திருவிழா நடைபெறும் என்றும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் நவம்பர் 23-ம் தேதி மகா தேரோட்டம் நடைபெறும். அதனைத் தொடர்ந்து நவம்பர் 26 -ம் தேதி விழாவின் நிறைவு நாளன்று பரணி தீபம் ஏற்றப்படும். அன்று மாலை 6 மணிக்கு 2668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக சாதாரண நாட்களில் ஆயிரம் ரூபாய் முதல் 3 ஆயிரம் ரூபாய் வரை விடுதி கட்டணங்களை வசூலிப்பது வழக்கம். ஆனால் திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி 10 முதல் 15 மடங்கு வரை விடுதி கட்டணங்களை உயர்த்தி உள்ளதாக பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதில் தமிழக அரசு தலையிட்டு கட்டணங்களை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.